2014-04-26 16:32:31

இறை இரக்கத்தின் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஏப்ரல், 27, இந்த ஞாயிறு, உலகில் பல கோடி மக்களின் கவனம் வத்திக்கானை நோக்கித் திரும்பியிருக்கும். ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களையும், முத்திப்பேறு பெற்ற 2ம் ஜான்பால் அவர்களையும் புனிதர்களாக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்றுகிறார். இந்நாள், திருஅவை வரலாற்றில் ஒரு தனியிடம் பெறும் நாள். வாழும் இரு திருத்தந்தையர் இணைந்து, மறைந்த இரு திருத்தந்தையரை புனிதர்களாக உயர்த்தும் நிகழ்வு, திருஅவை வரலாற்றில் அற்புதமான, அழகானதோர் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

திருஅவை வரலாற்றைப் புரட்டும்போது, அங்கு எல்லாமே, அழகாக, அற்புதமாக அமையவில்லை. 'திருஅவை' என்ற வார்த்தையில், 'திரு' என்பது புனிதத்தைக் குறிக்கும் வார்த்தை. நாம் பயன்படுத்தும் 'விசுவாசப் பிரமாண'த்தில், "ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபையை விசுவசிக்கிறேன்" என்று ஒவ்வொரு ஞாயிறன்றும் சொல்கிறோம்.
ஆனால், நாம் புனிதம் என்று அறிக்கையிடும் இத்திருஅவை, தன் புனிதத்தை இழந்து புதைந்துபோன நாட்கள் பல உண்டு. ஒவ்வொருமுறையும், இறைவன் அருளால் தாய் திருஅவை உயிர்பெற்று எழுந்துள்ளது. புனிதமற்ற மனிதர்களால் சிதைந்துபோன திருஅவை, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, புனிதமான மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டி வருகிறது. நாம் நினைத்தால், ஒவ்வொருவரும் புனிதம் அடையலாம் என்பதை நினைவுறுத்தி வருகிறது.
முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான், 2ம் ஜான்பால் என்ற இரு திருத்தந்தையரையும் புனிதர்களாகக் கொண்டாடும் இந்தப் பெருவிழாவில் புனிதத்தைப் பற்றியும், இவ்விரு புனிதர்களைப் பற்றியும் சிந்திப்பது நம்மை மேன்மைப்படுத்தும். நாமும் புனிதராகலாம் என்ற நம்பிக்கையை வளர்க்கும்.

கனடாவில், 'Salt and Light' என்ற ஒரு தொலைக்காட்சி மையத்தை நடத்திவரும் அருள் பணியாளர் Thomas Rosica என்பவர், ஒரு மாதத்திற்கு முன் வெளியிட்ட ஓர் அழகிய நூல் John Paul II - A Saint for Canada, கனடா நாட்டிற்கான புனிதர் - இரண்டாம் ஜான்பால். இந்நூலின் அறிமுகப் பக்கங்களில் அவர் எழுதியுள்ள சில எண்ணங்கள், புனிதத்தைப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளன:
"ஒருவர் 'முத்திப்பேறு பெற்றவர்' என்றோ 'புனிதர்' என்றோ அறிவிக்கப்படும்போது, அப்பழுக்கற்ற உன்னதத்தைப் பற்றிய அறிவிப்பு அல்ல அது. அந்த மனிதர் எவ்விதக் குறையும், பாவமும் அற்றவர் என்ற அறிவிப்பு அல்ல...
முத்திப்பேறு பெற்றவராக, புனிதராக ஒருவர் அறிவிக்கப்படும்போது, அவர் கடவுளின் கருணையைச் சார்ந்து, அவருடன் வாழ்ந்தார்; கடவுளின் சக்தியை நம்பி, தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்; முடியாதது என்பதும், முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தார்; தன் பகைவர்களையும், தன்னைத் துன்புறுத்தியோரையும் மன்னித்து வாழ்ந்தார்; வன்முறைகள், தீமைகள் அவரைச் சூழ்ந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்ந்தார்; இறுதியில் அவர் இவ்வுலகம் விட்டுச் செல்லும்போது, அதை இன்னும் சற்று அழகுமிக்கதாய் விட்டுச் சென்றார் என்பதே அந்த அறிவிப்பில் அடங்கியுள்ளது."
Thomas Rosica அவர்கள் கூறியுள்ள இந்தக் குணநலன்கள் பலவற்றையும் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தியவர்கள் - திருத்தந்தை 23ம் ஜான் மற்றும், 2ம் ஜான் பால். இவ்விருவரும் ஏப்ரல் 27, இஞ்ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்படுவது இன்னும் போருத்தமுள்ளதாகத் தெரிகிறது.

உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று அழைக்கிறோம். இறை இரக்க ஞாயிறன்று, முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான்பால் அவர்கள், புனிதராக உயர்த்தப்படுவது மிக,மிகப் பொருத்தமானது. ஏனெனில், இவர்தான், உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை இறை இரக்க ஞாயிறு என்று 2000மாம் ஆண்டு உருவாக்கினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 2005ம் ஆண்டு இறை இரக்க ஞாயிறுக்கு முந்திய இரவு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இறையடி சேர்ந்தார். 6 ஆண்டுகளுக்குப் பின், அதே இறை இரக்க ஞாயிறன்று இவர் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட்டார். 9 ஆண்டுகளுக்குப் பின், அதே இறை இரக்க ஞாயிறன்று இவர் புனிதராகவும் உயர்த்தப்படுகிறார்.
இவ்விரு திருத்தந்தையரையும் புனிதர்களாக உயர்த்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏன் 'இறை இரக்கத்தின் ஞாயிறை'த் தேர்ந்தெடுத்தார் என்று கேட்டபோது, அவர் "இவ்வுலகம் என்றுமில்லாத அளவுக்கு இரக்கத்தை இழந்து தவிக்கிறது. எனவே, நாம் வாழும் உலகிற்கு 'இரக்கத்தின் காலம்' (the age of mercy) மிக அதிகமாகத் தேவைப்படுகிறது" என்று பதில் சொன்னார். 'இரக்கத்தின் கால'த்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் பறைசாற்றிய இரு திருத்தந்தையரை இறை இரக்க ஞாயிறன்று புனிதர்களாக அறிவிப்பது மிகப் பொருத்தமாகத் தெரிகிறது.

இறைவனின் இரக்கம், கருணை இவற்றை வாழ்வின் பல சூழல்களில் பல நிலைகளில் நாம் உணர்ந்திருக்கிறோம். சிறப்பாக, நம் வாழ்வில் ஏற்படும் பல்வேறு சந்தேகப் புயல்களை இறைவன் அடக்கி, மனதில் அமைதியை உருவாக்கும் நேரத்தில் இந்த இறை இரக்கத்தின் சிகரத்தை நாம் தொட்டிருக்கிறோம். அப்படி ஒரு சிகரத்தைத் தன் சீடர்கள் தொடுவதற்கு இயேசு உதவிய ஒரு நிகழ்ச்சியை இன்றைய நற்செய்தியாக நாம் வாசிக்கிறோம்.
உண்மையைப் பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரி வள்ளல்" என்றும் அழைப்பதுபோல், சந்தேகப்படும் யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் ஓர் எடுத்துக்காட்டாக மாறிவிட்டார். இந்தச் சந்தேகத் தோமாவை இறை இரக்கத்தின் சிகரத்திற்கு அழைத்துச் சென்றார் இயேசு.

தோமா இயேசுவைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில் பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்று கேள்வி கேட்கிறோம். "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் தந்து விடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வது எளிது. தோமா மீது கண்டனக் கற்களை எறிவதற்கு முன், நம்மில் யார் இதுவரை சந்தேகப்படாமல் வாழ்ந்திருக்கிறோமோ அவர்கள் அவர் மீது முதல் கல் எறியட்டும். நெருங்கிப் பழகிய பலரை... நம் பெற்றோரை, வாழ்க்கைத் துணையை, நம் பிள்ளைகளை, உயிர் நண்பர்களை நாம் பல நேரங்களில் சந்தேகப்படும்போது, தோமா இயேசுவைச் சந்தேகித்ததை எவ்விதம் குறை சொல்ல முடியும்?

கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். எதையும் நம்பமுடியாமல், சந்தேகச் சமுத்திரத்தில் மூழ்கியிருப்போம். ஆகவே, தோமாவைத் தீர்ப்பிட நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளை விட்டு எழுவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச் சிந்திப்போம்.

உயிர்ப்புக்குப் பின் இயேசு சீடர்களைச் சந்தித்த நிகழ்வுகளை சிறிது ஆழமாக ஆய்வு செய்தால், இயேசுவின் உயிர்ப்பை தோமா மட்டும் சந்தேகப்படவில்லை; எல்லா சீடர்களுமே சந்தேகப்பட்டனர் என்பது தெளிவாகும். இயேசுவிடம் கேட்க முடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டு சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் தத்தளித்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் மீன் பிடிக்கும் தொழில், பெற்றோர், குடும்பம், வீடு என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து அவர்கள் கட்டியிருந்த பல மனக்கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டன.

எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை, சந்தேகமும், பயமும் நிரப்பிவிட்டன.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த சீடர்களை இயேசு அப்படியே விட்டுவிடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய, சாத்தப்பட்ட கதவுகள் இயேசுவுக்கு ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கதவுகள் எம்மாத்திரம்.
சாத்தப்பட்ட அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றதை, சீடர்களால் நம்ப முடியவில்லை. கதவு, சன்னல்கள் எல்லாம் சாத்தப்பட்ட ஓர் அறைக்குள் உடலோடு ஒருவரால் வர முடியுமா? முடியாது. இயற்கை நியதிகளுக்கு, அறிவியல் கூற்றுகளுக்கு முரணான ஒரு செயல். இயற்கை நியதிகள், அறிவியல் இவை மீறப்படும்போது, சந்தேகம் எழும். அறிவு அந்தச் செயலை ஏற்க மறுக்கும்.
ஆனால், அறிவும் அறிவியலும் சொல்வதை மட்டும் வைத்து வாழ்க்கையை நடத்திவிட முடியாதே. இரண்டும் இரண்டும் நான்குதான். ஆனால், சில சமயங்களில் இரண்டும் இரண்டும் ஐந்தாகலாம் அல்லது, மூன்றாகலாம். இதைப் புரிந்துகொள்ள மனம் வேண்டும், ஆன்மா வேண்டும், வெறும் அறிவு இங்கே உதவாது. எத்தனை முறை இதுபோன்ற அனுபவங்கள் நமக்கு இருந்திருக்கின்றன! நமது அறிவு ஒரு வழியில் சிந்திக்கும்போது, நமது மனம்... ஆழ் மனம் வேறு வழியில், அறிவுக்கு முற்றிலும் மாறுபட்ட வழியில் சிந்தித்திருக்கிறதல்லவா? பல சமயங்களில் அறிவை விட மனம் சொல்வது மிக அழகானதாய், அற்புதமானதாய், உண்மையாய் இருந்திருக்கிறது. என்பதை நாம் மறுக்கமுடியுமா?

சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு இயேசு கூறிய பதில்: இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். (யோவான் 21: 27,29) இந்தச் சொற்களை வித்தியாசமாக நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், இயேசு சீடர்களிடம், தோமாவிடம், நம்மிடம் சொல்வது இதுதான்: "அறிவை மட்டும் நம்பி வாழாதே. மனதை நம்பு, ஆன்மாவை நம்பு. என்னை நம்பு. நம்பிக்கையோடு என்னை நீ தொடுவதால், நீயும் தொடப்படுவாய்."

இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதை நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் தோமாவின் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 21: 28)
இயேசுவை கடவுள் என்று கூறிய முதல் மனிதப் பிறவி தோமாதான். இயேசு தோமாவை இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், குறிப்பாக, இந்தியாவிலும் பறை சாற்றினார் தோமா.
அறிவைக் கடந்த இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கம் சந்தேகப் புயல்களை அடக்கும்; சந்தேக மலைகளைத் தகர்க்கும்; சந்தேகக் கல்லறைகளைத் திறக்கும். இந்த இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர சந்தேகத் தோமாவின் பரிந்துரையோடு வேண்டுவோம்.

இன்று புனிதராக உயர்த்தப்படும் திருத்தந்தை 23ம் ஜான், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டப்போவதாக அறிவித்தபோது, சூழ இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்; அவரைச் சந்தேகக் கண்களுடன் பார்த்தனர். ஆயினும், அவர் உயிர்த்த இயேசுவை நம்பி, தூய ஆவியின் தூண்டுதலுக்குச் செவிமடுத்து, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் துவக்கினார். பல ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த திருஅவையில் புதிய காற்று வீசட்டும் என்று முழங்கியவர் 'நல்லத் திருத்தந்தை' என்று அழைக்கப்படும் 23ம் ஜான். அவர் துவக்கிய பொதுச்சங்கத்தை அவரால் முடிக்க முடியவில்லை என்றாலும், அந்தப் பொதுச்சங்கம் திருஅவையில் ஒரு நிலநடுக்கத்தையே உருவாக்கியது என்று சொல்லலாம்.
அதேபோல், கம்யூனிச உலகில் பெரும் நிலநடுக்கத்தைக் கொணர்ந்தவர் திருத்தந்தை 2ம் ஜான்பால். கம்யூனிச ஆதிக்கத்தில் தளையுண்டு கிடந்த பல நாடுகளை, தலைநிமிர்ந்து வாழச் செய்தவர் இவர். இவ்விரு புனிதர்களின் பரிந்துரையால், நாமும் நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையோடு, நாளைய உலகைச் சந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.