திருத்தந்தை பிரான்சிஸ் போலந்து நாட்டு மக்களுக்கு அனுப்பியுள்ள சிறப்பான ஒலி-ஒளிச்
செய்தி
ஏப்.25,2014. கத்தோலிக்கத் திருஅவையை மூன்றாம் மில்லென்னியத்திற்குள் அழைத்து வந்ததோடு,
புனிதத்திற்குத் தலைசிறந்த சாட்சியாகவும் வாழ்ந்தவர் 2ம் ஜான்பால் என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் கூறினார். ஏப்ரல் 27, வருகிற ஞாயிறன்று நடைபெறும் புனிதர் பட்ட
விழாவையொட்டி, போலந்து நாட்டு மக்களுக்கு தன் சிறப்பான வாழ்த்துக்களை, ஒலி-ஒளிச் செய்தியாக
அனுப்பியுள்ள திருத்தந்தை, அச்செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். முத்திப்பேறு பெற்ற
2ம் ஜான்பால் அவர்களை, புனிதராக அறிவிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளது ஒரு பெரும்
பேறு என்று கூறியுள்ளத் திருத்தந்தை, இம்மாமனிதரை கத்தோலிக்கத் திருஅவைக்கு மட்டுமல்லாமல்,
இவ்வுலகிற்கும் தலைசிறந்த பரிசாக அளித்த போலந்து நாட்டு மக்களுக்கு தன் சிறப்பான நன்றியைத்
தெரிவித்துள்ளார். கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு தன் உள்ளக் கதவுகளை முற்றிலும் திறந்த
2ம் ஜான்பால் அவர்கள், கிறிஸ்துவின் தாக்கம், கத்தோலிக்கத் திருஅவையிலும், இவ்வுலகிலும்
நிலைக்கும்படி, அவர் மூடியிருந்த பல கதவுகளைத் திறந்தார் என்று இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.போலந்து
நாட்டுத் தொலைக்காட்சிக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய இந்த ஒலி-ஒளிச் செய்தி,
அந்நாட்டில், இவ்வியாழன் மாலை 8.30 மணிக்கு ஒளிபரப்பானது.