2014-04-24 16:29:54

புனிதர்பட்ட விழாவையொட்டி, உரோம் நகரும், வத்திக்கானும் இணைந்து மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்த விவரங்கள்


ஏப்.24,2014. முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் மற்றும் 2ம் ஜான்பால் ஆகிய இரு திருத்தந்தையரின் புனிதர்பட்ட விழாவையொட்டி, உரோம் நகரும், வத்திக்கானும் இணைந்து மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து, ஏப்ரல் 23, இப்புதன் மாலை, செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரங்கள் வழங்கப்பட்டன.
ஏப்ரல் 26, சனிக்கிழமை அதிகாலை முதல், ஞாயிறு நள்ளிரவு முடிய உரோம் நகரின் 'மெட்ரோ' இரயில் வண்டிகள் தொடர்ந்து ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கானைச் சுற்றி, பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றாலும், நகரின் பல மையப் பகுதிகளிலிருந்து, வத்திக்கானுக்கு மக்களைக் கொணரும் வகையில் சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2,500க்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களின் உதவியால், மக்களுக்கு, 40 இலட்சம் குடி நீர் பாட்டில்களும், திருப்பலியின் செபங்கள் அடங்கிய, 1,50,000 புத்தகங்களும் இலவசமாக வழங்குவதற்கென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறும் இச்சிறப்புத் திருப்பலி, மற்றும் இவ்விழா தொடர்பாக நிகழும் ஏனைய நிகழ்வுகள் அனைத்தும், உரோம் நகரின் முக்கியமான சதுக்கங்களில் பொருத்தப்பட்டுள்ள 17 பிரம்மாண்டமான திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
ஏப்ரல் 25, இவ்வெள்ளி முதல், ஏப்ரல் 28 வருகிறத் திங்கள் முடிய நிகழும் பல்வேறு நிகழ்வுகளின் விவரங்களும் செய்தியாளர்களின் கூட்டத்தில் விளக்கப்பட்டன.
இந்நிகழ்வுகள் அனைத்தின் சிகரமாக, ஏப்ரல் 27, ஞாயிறு, காலை 10 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும் புனிதர் பட்ட திருப்பலி, உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும்.
திருத்தந்தையர் இருவரின் புனிதர் பட்ட விழாவின் முழு விவரங்களையும், 2popesaints.org என்ற வலைத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.