2014-04-24 16:27:38

திருத்தந்தை பிரான்சிஸ் - வௌவால்களைப்போல், இருளில் சுகம் காணும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்


ஏப்.24,2014. இருளை நாடும் வௌவால்களைப்போல், இறைவனின் பிரசன்னம் என்ற ஒளியைத் தேடாமல், இருளில் சுகம் காணும் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஒரு சில நாட்கள் இடைவெளிக்குப் பின், இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், திருப்பலியாற்றியத் திருத்தந்தை, தன் மறையுரையில், உயிர்ப்பின் நற்செய்தி தரும் மகிழ்வை உள்ளூர உணராதவர்களைக் குறித்துப் பேசினார்.
உயிர்ப்புக்குப் பின், தங்கள் மத்தியில் தோன்றிய இயேசுவைக் கண்டு, அச்சமும், ஐயமும் கொண்ட சீடர்களைப் போல், உயிர்ப்பின் செய்தியை ஏற்க மறுக்கும் கிறிஸ்தவர்கள், இயேசுவின் சாவிலேயேத் தங்கி விடுகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை.
நம்பமுடியாத இந்த மகிழ்வு நம்மைத் தடுமாற வைப்பதால், இயேசு உண்மையிலேயே உயிர்க்கவில்லை, உயிர்த்ததுபோல் நடித்தார் என்ற பாணியில் சிந்திக்கிறோம் என்ற எச்சரிக்கையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்தார்.
"கொதிக்கும் பாலால் சூடுபட்டவர்கள், அடுத்த முறை ஒரு பசுமாட்டைக் கண்டு பயந்து அழுவர்" என்று அர்ஜென்டீனா நாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பழமொழியைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கல்வாரிக் கொடுமையால் சூடுபட்டவர்கள், மீண்டும், உயிர்த்த கிறிஸ்துவைக் கண்டு, பயந்து அழுவது தவறு என்று விளக்கிக் கூறினார்.
நமது ஐயங்களையும், அச்சங்களையும் தீர்க்க, உயிர்த்த இயேசு நம்மை அழைக்கிறார்; தன்னைத் தொட்டுப் பார்த்து, நாம் நம்பிக்கையில் உறுதிபெற வேண்டும் என்பதை விரும்புகிறார் என்று மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.