2014-04-23 16:24:56

புனிதர் பட்டத் திருவிழாவுக்கு முன்னோடியாக, உரோம் நகரில் இளையோரை மையப்படுத்திய நிகழ்வுகள்


ஏப்.23,2014. வருகிற ஞாயிறன்று நடைபெறவிருக்கும் புனிதர் பட்டத் திருவிழாவுக்கு ஒரு முன்னோடியாக, இளையோரை மையப்படுத்திய நிகழ்வுகள் இச்செவ்வாய் மாலை உரோம் நகரின் புனித லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் துவங்கின.
"புனிதர்களின் உரிமைப்பேறு" என்ற தலைப்பில் நடத்தப்படும் இம்முயற்சிகளின் முதல் நிகழ்வில் கலந்துகொள்ள பல்லாயிரம் இளையோர் புனித லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் கூடியிருந்தனர்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் புனிதர் பட்ட நிலைக்கென உழைத்த அருள் பணியாளர் Giovangiuseppe Califano அவர்கள் இளையோரிடம் பேசியபோது, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் தன் பணிக்காலத்தில் இளையோரைத் தேடி பங்குத் தளங்களுக்கும், சிறைச் சாலைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்றார் என்பதைக் குறிப்பிட்டார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் வழியாக, திருஅவையின் கதவுகள், சன்னல்களைத் திறந்த திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், உரையாடல் கலாச்சாரத்தில் வளர்வதற்கு இன்றும் நம்மை அழைக்கிறார் என்று அருள் பணியாளர் Califano அவர்கள் வலியுறுத்தினார்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் காட்டியுள்ள புனித வாழ்வு நாம் அனைவருமே பின்பற்றக் கூடிய எளிய வழியே என்பதை அருள் பணியாளர் Califano அவர்கள் சுட்டிக்காட்டினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் புனிதர் பட்ட நிலைக்கென உழைத்த அருள் பணியாளர் Slawomir Oder அவர்கள், உலகெங்கிலும் உள்ள இளையோரைக் கவர்ந்து, அவர்கள் மத்தியில், குறிக்கோள் உள்ள வாழ்வில் பிடிப்பை உருவாக்கியவர், திருத்தந்தை 2ம் ஜான்பால் என்று கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.