2014-04-23 16:03:33

புனிதரும் மனிதரே : இறையழைப்பு எங்கிருந்தும் வரலாம்


இஸ்பெயின் நாட்டுத் தலைநகர் மத்ரித்தில் ஏழைகள் அதிகம் வாழும் புறநகர்ப் பகுதி ஒன்றில் அருள்பணியாளர் மிக்கேல் மேய்ப்புப்பணியாற்றி வந்தார். அப்பகுதியில் ஏழைகள் மற்றும் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சேவை செய்ய இயலாமல் கஷ்டப்பட்டார். இதனால் வீடுகளுக்கேச் சென்று மருத்துவப் பணியாற்றும் தாதியரைக் கொண்ட ஒரு சபையைத் தொடங்க விரும்பினார். வியாகுல அன்னைமரியின் ஏழு பெரும் துன்பங்களில் சிறப்புப் பக்தி கொண்ட இவர் மரியின் ஏழு பணியாளர்களைக் கொண்டு அச்சபையை நிறுவவும் விரும்பினார். இச்சபையில் ஏழாவதாகச் சேர்ந்தவர் விபியானா தோரஸ். இவர் இளவதிலேயே அண்டை வீடுகளிலுள்ள நோயாளிகளைச் சந்தித்து வந்தார். பிறர் செய்த தவறுகளுக்காகச் சிறு சிறு தபச் செயல்கள் செய்து வந்தார். தொமினிக்கன் மூன்றாம் சபையில் சேரவும் விண்ணப்பித்தார் விபியானா. ஆனால் அச்சபையில் இடம் இல்லாததால் இவர் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனவே தொமினிக்கன் சபையில் சேருவதற்கு வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட விபியானா அருள்பணியாளர் மிக்கேல் அவர்களை அணுகினார். இறுதியில் 1851ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி 24 வயது விபியானாவும் மற்ற ஆறுபேரும் ஏழ்மை, கன்னிமை, பணிவு ஆகிய மூன்று வார்த்தைப்பாடுகளை எடுத்தனர். விபியானா தோரஸ், சகோதரி மரிய சோலேதாத் என்ற பெயரை ஏற்றார். இப்புதிய சபை கஷ்டங்களை எதிர்கொண்டது. அதன் முதல் சபை அதிபர் சபையைவிட்டு விலகினார். சகோதரிகள் ஏழைகளாக சாப்பாடுகூட இல்லாமல் கஷ்டப்பட்டனர். பின்னர் சகோதரி மரிய சோலேதாத் சபை அதிபரானார். பலமணி நேரச் செபங்கள், ஞானமுள்ள வழிகாட்டுதல் மூலம் சபை வளர்ந்தது. இவர் இறப்பதற்கு முன்னர் சபை வளர்ந்து, திருத்தந்தையின் அங்கீகாரமும் பெற்றது. 1826ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி மத்ரித்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த புனித மரிய சோலேதாத், 1887ம் ஆண்டு தனது 60வது வயதில் இறந்தார். 1970ம் ஆண்டில் புனிதராக அறிவிக்கப்பட்டார். இவரது விழா அக்டோபர் 11.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.