2014-04-23 16:16:28

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்.23,2014. கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவிற்குப் பின்வரும் இப்புதனன்று திருத்தந்தையின் பொது மறையுரைக்குச் செவிமடுக்க பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகள் கூடியிருந்தனர். காலையில் பொதுமறையுரை துவங்குவதற்கு முன்னர் இலேசாக மழை தூறிக்கொண்டிருந்தபோதிலும் குடைகளைத் தாங்கியவண்ணம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததற்கு இரு முக்கிய வேறு காரணங்களும் இருந்தன.
முதலில் இப்புதனன்று திருத்தந்தையின் நாம விழா. புனித ஜார்ஜின் விழாவைக்கொண்டாடும் இந்நாள், அதாவது Jorge என்ற இயற்பெயரைக் கொண்டிருக்கும் திருத்தந்தையின் நாமவிழா. மேலும், வரும் ஞாயிறன்று திருஅவையில் இரு திருத்தந்தையர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே திருப்பயணிகளின் வருகை, குறிப்பாக போலந்து நாட்டு திருப்பயணிகள் வருகை பெருமெண்ணிக்கையில் உள்ளது.
இளையோரைக் கவர்ந்துள்ள திருத்தந்தையர்கள் 23ம் ஜான் மற்றும் இரண்டாம் ஜான் பால் இருவரையும் புனிதர்களாக அறிவிக்க உள்ள இஞ்ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்ள இளையோரும் பெருமெண்ணிக்கையில் உரோம் நகர் வந்துள்ளனர். இதனாலும் இப்புதன் மறைபோதகத்திற்கென தூய பேதுரு வளாகம் நிரம்பி வழிந்தது. திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு 'உயிரோடு இருப்பவரை இறந்தோரிடையே தேடுவானேன்' என்ற வானதூதரின் வார்த்தைகளை வைத்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு சகோதர சகோதரிகளே! இவ்வுலகிலும் திருஅவையிலும் இயேசு கொண்டிருக்கும் தொடர்ந்த பிரசன்னத்திலும், கிறிஸ்துவின் உயிர்ப்பிலும் நாம் கொள்ளும் விசுவாசத்திலிருந்து பிறக்கிறது இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்வு. உயிர்ப்போடு அனைத்தும் புதியனவாக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுலகின்மீது புதிய நம்பிக்கைகளும் பொழியப்பட்டுள்ளன. இயேசு உயிர்த்த நாள் காலையில், வானதூதர் பெண்களை நோக்கி, 'உயிரோடிருப்பவரை கல்லறையில் தேடுவானேன்’ (லூக் 24: 5) என எழுப்பிய கேள்வி, நம்மையும் நோக்கி எழுப்ப்படும் கேள்வியாக உள்ளது.
வாழ்வையே மாற்றியமைக்கும் வகையில், உயிர்த்த இயேசுவோடு இடம்பெற்ற மூன்று சந்திப்புகள் குறித்து நமக்கு காண்பிக்கும் நற்செய்தி நூல், நாமும் அத்தகைய சந்திப்புகளைப் பெற அழைப்பு விடுக்கிறது. இயேசு புதிய வாழ்வுக்கு உயிர்த்தார் என்ற உணமை நிலையை, புனித தோமையார் போல் நாமும் புரிந்துணரவேண்டும். இயேசு நம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதை மரிய மதலேனாள் போல் நாமும் செவிமடுக்கவேண்டும். எம்மாவுஸ் செல்லும் பாதையில் இயேசுவை சந்தித்த பயணிகள் போல் நாமும், ஆண்டவர் எப்போதும் நம் அருகில் உள்ளார் என்பதை ஏற்று அதன் வழி, புதுப்பிக்கப்பட்ட மகிழ்வையும் நம்பிக்கையையும் கண்டுகொள்ளவேண்டும். இந்தத் திருத்தூதர்கள், வாழ்பவரை இறந்தோரிடையேத் தேடினர். இருப்பினும் இயேசு, வேறுவழிகளில் அவர்களை வழிநடத்தி அவரிலும், அவர் உயிர்ப்பின் வல்லமையிலுமான விசுவாசம் நோக்கி அழைத்துச் சென்றார். நாம் அவரை சந்திப்பதிலிருந்து நம்மை பின்னோக்கி இழுத்து வைத்திருக்கும் அனைத்தையும் கைவிட்டு, அவர் மட்டுமே நமக்கு வழங்கவுள்ள மறுபிறப்பு, சுதந்திரம், மற்றும் நம்பிக்கையைப் பகிரும் வண்ணம், வாழும் தெய்வமாம் இயேசுவைத் தேட, நாம் ஒவ்வவொருவரும் அழைக்கப்படுகிறோம்.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.