2014-04-23 16:23:44

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு திருத்தந்தையரையும் ஒரே நாளில் புனிதர்களாக உயர்த்துவது பொருத்தமான முயற்சி - கர்தினால் Poupard


ஏப்.23,2014. இறைவனுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அழகாலும், மக்களுக்குப் பணியாற்றிய உண்மையான அருள் பணியாளர்களாக வாழ்ந்ததாலும், திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் இன்று புனிதர்களாகப் போற்றப்படுகின்றனர் என்று முன்னாள் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் பதவிக் காலத்தில் திருப்பீடச் செயலர் அலுவலகத்தில் பணியாற்றி, பின்னர், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் பதவிக் காலத்தில், திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவராக பணியாற்றிய கர்தினால் Paul Poupard அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"கீழ்ப்படிதலும் அமைதியும்" என்ற விருதுவாக்குடன் பணியாற்றிய திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், "முற்றிலும் உமக்கே" என்ற விருதுவாக்குடன் பணியாற்றிய திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும் தங்களை முற்றிலும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் என்பதை அவர்களது விருதுவாக்குகளே பறைசாற்றுகின்றன என்று கூறினார் கர்தினால் Poupard.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் திருஅவையின் கதவுகளைத் திறந்ததால், திருத்தந்தை 2ம் ஜான் அவர்களால் எளிதாகப் பணியாற்ற முடிந்தது என்றும், இவ்விருவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரே நாளில் புனிதர்களாக உயர்த்துவது பொருத்தமான முயற்சி என்றும் கர்தினால் Poupard அவர்கள் எடுத்துரைத்தார்.
இவ்விரு திருத்தந்தையரும் பல குணங்களில் ஒத்திருந்தாலும், இருவரும் இன்னும் பல வழிகளில் வேறுபட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Poupard அவர்கள் புனிதம் அடைவதற்குப் பல வழிகள் உள்ளன என்பதை இந்நாளில் கடவுள் நமக்கு நினைவுறுத்துகிறார் என்று கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.