2014-04-23 16:19:27

திருத்தந்தை 23ம் ஜான் - "என்னைப் புனிதத் தந்தை என்று மக்கள் அழைக்கின்றனர்; அதற்குத் தகுந்ததுபோல், நான் புனிதனாக வாழ முயற்சி செய்யவேண்டும்"


ஏப்.23,2014. திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை எண்ணிப்பார்க்கும்போது, எளிமை, தாராள மனப்பான்மை, மற்றும் உண்மையான மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளே நம் உள்ளத்தை நிறைக்கின்றன என்று அருள் பணியாளர் Giovangiuseppe Califano அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 27, வருகிற ஞாயிறன்று திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்படும் முக்கிய நிகழ்வையொட்டி, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு முதல் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
திருத்தந்தையர்களின் புனிதர் படி நிலைக்காக தரவுகளைத் திரட்டிய அருள் பணியாளர் Califano அவர்களும், அருள் பணியாளர் Slawomir Oder அவர்களும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்விரு திருத்தந்தையரின் சிறப்பான குணங்களைக் குறித்துப் பேசினர்.
"என்னைப் புனிதத் தந்தை என்று மக்கள் அழைக்கின்றனர்; அதற்குத் தகுந்ததுபோல், நான் புனிதனாக வாழ முயற்சி செய்யவேண்டும்" என்று திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்திய அருள் பணியாளர் Califano அவர்கள், தன் சிறுவயது முதல் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் புனிதராக மாறும் ஆவலை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைக் குறித்துப் பேசிய அருள் பணியாளர் Oder அவர்கள், திருத்தந்தையின் செப வாழ்வு, துன்பங்களைத் தாங்கிய பொறுமை ஆகியவற்றை வலியுறுத்தினார்.
புனிதர் பட்டத் திருவிழாவுக்கு முன்னர், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இன்னும் சில கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.