2014-04-23 16:21:47

கடந்த 50 ஆண்டுகளில் திருஅவையை வழிநடத்திய அனைத்துத் திருத்தந்தையரும் உலக அமைதியை வலியுறுத்தியுள்ளனர் - திருப்பீடச் செயலர்


ஏப்.23,2014. கடந்த 50 ஆண்டுகளில் திருஅவையை வழிநடத்திய அனைத்துத் திருத்தந்தையரும் உலக அமைதியை வலியுறுத்தி செய்திகளும், சுற்றுமடல்களும், உரைகளும் வழங்கியுள்ளனர் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
வருகிற ஞாயிறன்று நடைபெறும் புனிதர் பட்ட விழாவையொட்டி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், "அமைதிக்கானத் திருத்தந்தையர்" (The Popes of Peace) என்ற பெயரில் வெளியான ஒரு நூலுக்கு அளித்தப் பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், இரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு, கியூபா ஏவுகணை நெருக்கடி உருவான நேரத்தில், திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும், அவர் உலகினர் அனைவருக்கும் வழங்கிய "உலகில் அமைதி" (Pacem in Terris) என்ற புகழ்மிக்க சுற்றுமடலையும் கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், உலக அமைதி குறித்து மடல்கள், செய்திகள், உரைகள் பலவும் வழங்கியதோடு, போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு நேரடியாகச் சென்று, அமைதிக்காக விண்ணப்பித்தார் என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.
இவ்விரு திருத்தந்தையரின் அமைதி முயற்சிகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், 2ம் உலகப் போர் மூண்டபொழுது அதற்கு எதிராகக் குரல்கொடுத்த திருத்தந்தை 12ம் பயஸ், ஐ.நா.அவையில் உலக அமைதி குறித்துப் பேசிய திருத்தந்தை 6ம் பவுல் ஆகியோரும், மேற்கொண்ட முயற்சிகளை நாம் மறக்கக்கூடாது என்று கூறினார், திருப்பீடச் செயலர்.
நாம் கடந்து வந்த நூற்றாண்டில் பெரிதும், சிறிதுமாக இவ்வுலகம் சந்தித்துள்ள போர்களைக் குறித்து கவலை வெளியிட்டுள்ள திருத்தந்தையரின் வழிவந்துள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உலக அமைதிக்காகத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.