2014-04-23 16:28:31

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்


ஏப்.23,2014. ஏப்ரல் 23, இப்புதனன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. எல்லா வேறுபாடுகளையும் கடந்த உலக வாசகர்களின் பிறந்த நாளாக புத்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் என்று கருதப்படும் Miguel de Cervantes Saavedra, Maurice Druon, Inca Garcilaso de la Vega, Haldor Kiljan Laxness, Manuel Mejía Vallejo, Vladimir Nabokov, Josep Pla, William Shakespeare ஆகியோரின் பிறந்த அல்லது இறந்த நாளாக ஏப்ரல் 23ம் தேதி இருப்பதால், ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனம், UNESCO, 1995ம் ஆண்டு முதல், ஏப்ரல் 23ம் தேதியை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடி வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் கட்டலோனியா நகரத்தில், இந்நாளைக் காதலர் தினம் போலக் கொண்டாடுகின்றனர். ஆடவர் தங்கள் மனம் கவர்ந்த நங்கையர்க்கு ரோஜா மலர்களைப் பரிசாக அளிக்கும் வேளையில், பதிலுக்கு, அப்பெண்கள் புத்தகங்களை வழங்குவர்.
இந்நாளில் 4 மில்லியன் மலர்களும், 8 லட்சம் நூல்களும் கை மாறும் என்றும், ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் சரிபாதி இந்த ஒரு நாளில் விற்றுவிடும் என்றும் இணையதள குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.