2014-04-23 15:55:53

அமைதி ஆர்வலர்கள் – 1919,1920ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள்


ஏப்.23,2014. “ஆற்றோட்டத்துக்கு எதிராக நீந்திச் செல்பவர் அதன் வலிமையை அறிந்திருக்கிறார். இந்த உலகம் சனநாயகத்துக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். இந்த உலகின் அமைதி, அரசியல் சுதந்திரத்தின் அடித்தளங்களில் பரிசோதிக்கப்படுகிறது”. இப்படிச் சொன்னவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் 28வது அரசுத்தலைவர் தாமஸ் வுட்ரோ வில்சன். இவர் 1919ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவ்விருதை ஓராண்டு கழித்துத்தான் இவர் பெற்றார். 1919ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதுக்கென இடம்பெற்ற தேர்வு நடவடிக்கையில், இவ்விருதைப் பெற தகுதியுள்ளவர் என ஆல்பிரட் நொபெல் எழுதி வைத்துள்ள உயிலின் விதிகளின்படி யாரும் இல்லை என நார்வே விருதுக்குழு அறிவித்துவிட்டது. இதனால்தான் வுட்ரோ வில்சன் 1920ம் ஆண்டில் இவ்விருதைப் பெற்றார். 1919ம் ஆண்டு அக்டோபரில் இவர் திடீரென, கடும் நோயால் தாக்கப்பட்டதால் இவர் இவ்விருதைப் பெறுவதற்கு நேரிடையாகச் செல்லவில்லை. Versailles அமைதி உடன்படிக்கையையும், உலக நாடுகளின் கூட்டமைப்புத் திட்டத்தையும் அமல்படுத்த அமெரிக்க காங்கிரஸ் அவை முரண்டுபிடித்ததால், வுட்ரோ வில்சன் பல நாடுகளுக்குப் பல பயணங்களை மேற்கொள்ள நேரிட்டது. இதில் ஏற்பட்ட அலைச்சலில்தான் இந்த நோயால் இவர் தாக்கப்பட்டார் எனச் சொல்லப்பட்டுள்ளது. வுட்ரோ வில்சன் பெயரால் இவ்விருதைப் பெறச் சென்ற நார்வேக்கான அமெரிக்கத் தூதர் Albert Schmedeman வழியாக விருதுக்குழுவுக்கு நன்றித் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் அவர். வார்த்தையால் விவரிக்க முடியாத போரின் கொடுமைகள் நிறுத்தப்படுவதற்கு நாடுகள் மேலும் உழைக்க வேண்டுமென அத்தந்திச் செய்தியில் வுட்ரோ வில்சன் குறிப்பிட்டிருந்தார்.
முதல் உலகப் போர் முடிவதற்கும், எதிர்காலத்தில் போர்கள் இடம்பெறாதிருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் உலக நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க வுட்ரோ வில்சன் எடுத்த முயற்சிகளைப் பாராட்டும் விதமாக இவருக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. உலக நாடுகளின் கூட்டமைப்பை இவரால் தனது காலத்தில் உருவாக்க முடியவில்லை. எனினும், இரண்டாம் உலகப்போர் முடிந்து ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாவதற்கு, வுட்ரோ வில்சன் பரிந்துரைத்த உலக நாடுகளின் கூட்டமைப்பு எண்ணமே காரணமாகும். வில்சன் அமெரிக்க காங்கிரஸ் அவையில் 1918ம் ஆண்டு சனவரியில் 14 அம்சத் திட்டத்தை முன்வைத்தபோது உலகில் எதிர்காலத்தில் பன்னாட்டு அளவில் போர் இடம்பெறாதிருக்கும் திட்டத்தைப் பரிந்துரைத்தார் எனச் சொல்லலாம். ஐரோப்பாவில் நாடுகளின் எல்லை விவகாரம், வணிகத்தில் சமநிலை காக்கும் வரையறைகள், ஆயுதக் குறைப்பு, ஐரோப்பாவில் நலிவடைந்துவந்த பேரரசுகளின் முன்னாள் காலனிகளுக்குத் தேசிய இறையாண்மை வழங்குவது போன்றவை இந்த 14 அம்சத் திட்டத்தில் உள்ளடங்கும். ஆனால் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே, உலகில் நாடுகளுக்கு இடையே சண்டை தொடங்கினால் அதில் உலக நாடுகளின் கூட்டமைப்பு தலையிட்டு அமைதிக்கான தீர்வுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதாகும். முதல் உலகப் போரின் இறுதியில் பிரான்சும், பிரித்தானியாவும், ஜெர்மனியும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு மட்டுமல்லாம்ல, 20 மற்றும் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கும் வில்சனின் இந்த 14 அம்சத் திட்டம் அடித்தளமாக அமைந்தது.

1856ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டு வெர்ஜீனியா மாநிலத்தின் Staunton எனும் ஊரில் பிறந்த வுட்ரோ வில்சனின் குடும்பம், பக்தியுள்ள Presbyterian கிறிஸ்தவ சபையைச் சார்ந்தது. இவர் 1913ம் ஆண்டு முதல் 1921ம் ஆண்டுவரை அமெரிக்காவின் 28வது அரசுத்தலைவராகப் பணியாற்றியவர். 1916ம் ஆண்டில் இரண்டாவது முறையாக இவர் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, "இவர் நம்மைப் போர்களிலிருந்து வெகுதூரத்தில் வைத்துவிட்டார்" என்று மக்கள் சொல்லி மகிழ்ச்சியடைந்தனராம். முன்னேற்ற இயக்கத்தின் தலைவராக இருந்த இவர், 1902ம் ஆண்டு முதல் 1921ம் ஆண்டுவரை Princeton பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். வில்சன், நற்செய்தி அறிவுரைகளின்படி வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. 1919ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற தாமஸ் வுட்ரோ வில்சன், 1924ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி காலமானார். “செல்வம் சேமிப்பதற்காக அமெரிக்கா உருவாக்கப்படவில்லை. மாறாக, தொலைநோக்கை உண்மையாக்க, மக்கள் மத்தியில் சுதந்திரத்தைக் காப்பதற்காக அமெரிக்கா உருவாக்கப்பட்டது” என்று சொன்னவர் இவர்.
1920ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதைப் பெற்றவர் Leon Victor Auguste Bourgeois. உலக நாடுகளின் கூட்டமைப்பின் ஆன்மீகத் தந்தை என, இவர் அழைக்கப்படுகிறார். 1851ம் ஆண்டு பிரான்சில் பிறந்த Leon Victorரின் தந்தை, கடிகாரம் செய்யும் தொழிலைச் செய்தவர். இந்துமதம் பற்றியும் சமஸ்கிருத மொழியையும் கற்றவர். நீதிபதியாக, கலைஞராக, இன்னும், இசை, நுண்கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் ப்ரெஞ்ச் அரசிலுள்ள ஏறக்குறைய எல்லாப் பெரிய பதவிகளிலும் இருந்தவர். ப்ரெஞ்ச் அரசுத்தலைவர் பதவியை எளிதில் கைப்பற்றும் நிலை இருந்தும்கூட அப்பதவிக்குப் போட்டியிட இருமுறை வந்த வாய்ப்புக்களை மறுத்து விட்டவர். வருவாய் வரி, சமூகநல ஆயுள்காப்புத் திட்டங்கள், பொருளாதாரச் சமத்துவம், பரந்துபட்ட கல்வி வாய்ப்புகள், கூட்டுறவு அங்காடிகள் ஆகியவற்றை ஊக்குவித்தவர். கட்டாயப் போர் நிறுத்தம், ஆயுதக் களைவு, பொருளாதாரத் தடைகள், தேவையானால் அனைத்து நாட்டு இராணுவத்தைப் பயன்படுத்தல் ஆகியவைவழி அமைதியை நிலைநாட்ட முடியும் எனக் கூறியவர். ப்ரெஞ்ச் அரசில் பல அமைச்சர் பதவிகளைக் கொண்டிருந்தவர். 1899ம் ஆண்டில் Hague நகரில் நடந்த அமைதிக் கருத்தரங்குக்கு, ப்ரெஞ்ச் பிரதிநிதி குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றார். உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு முதல் தலைவராகப் பணியேற்றார் Bourgeois. இதுவே 1920ம் ஆண்டில் இவருக்கு நொபெல் அமைதி விருதைப் பெற்றுத் தந்தது.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் என்றார் இயேசு.








All the contents on this site are copyrighted ©.