2014-04-21 15:06:55

புனிதரும் மனிதரே : நகைச்சுவை நாயகர் (முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான்)


அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சில நாள்களில், புருனோ என்ற 12 வயதுச் சிறுவனிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவன், “எனது அன்புத் திருத்தந்தையே, நான் ஒரு காவல்துறைப் பணியாளராக (போலிஸ்காரராக) அல்லது திருத்தந்தையாகப் பணியாற்ற விரும்புகிறேன். நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” என்று கேட்டிருந்தான். அந்தக் கடிதத்துக்குப் பதில் அனுப்பிய அந்த திருத்தந்தை, “எனது சிறிய புருனோ, நீ எனது கருத்தை அறிய விரும்பினால், நீ காவல்துறைப் பணிக்குச் செல் என்றுதான் சொல்வேன். ஏனெனில் இப்பணிக்கு நிறையத் தயாரிப்புகள் தேவைப்படும். ஆனால் யாரானாலும் திருத்தந்தையாகலாம். நான் திருத்தந்தையாகியிருப்பதே இதற்குச் சான்று. நீ உரோமைக்கு வந்தால் என்னை வந்து பார். இவை குறித்து உன்னிடம் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைவேன்” என்று எழுதியிருந்தார். அந்த 12 வயதுச் சிறுவன் புருனோவுக்குக் கடிதம் எழுதியவர்தான் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான். இவர் மற்றவர்களைச் சிரிக்க வைப்பதில் சிறந்தவர். நகைச்சுவை நாயகர். 1958ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டுவரை திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை 23ம் ஜான், ஏப்ரல் 27, வருகிற ஞாயிறன்று புனிதர் என அறிவிக்கப்படவிருக்கிறார். ஒருவரைப் புனிதர் என அறிவிப்பதற்கு அவரின் பரிந்துரையால் குறைந்தது ஒரு புதுமை நடந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமலே இவரைப் புனிதர் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த அளவுக்கு அவரது வாழ்வு புனிதம் நிறைந்திருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.