2014-04-21 14:49:44

திருத்தந்தை : இயேசு உயிர்த்துவிட்டார் என்ற மகிழ்வுச் செய்தி நம் இதயங்களில் பொறிக்கப்படவேண்டும்


ஏப்.21,2014. இயேசு உயிர்த்துவிட்டார் என நற்செய்தியில் எழுதப்பட்டுள்ள மகிழ்வின் வார்த்தைகள், நம் இதயங்களிலும் வாழ்விலும் பொறிக்கப்படவேண்டும் என இத்திங்களன்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிர்ப்புத் திருவிழாவுக்கு மறுநாளும் இத்தாலியில் விடுமுறை நாளாகச் சிறப்பிக்கப்படுவதையொட்டி, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளோடு இணைந்து, நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலிச் செபத்தைச் செபித்து உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பு ஞாயிறு வழங்கும் வியத்தகு மகிழ்ச்சி நம் எண்ணங்களையும், பார்வைகளையும், நடவடிக்கைகளையும் வார்த்தைகளையும் ஒளிர்விக்கட்டும் என எடுத்துரைத்தார்.
உயிர்த்த இயேசுவைக் காணும் அனுபவத்தைப் பெறுபவர்களது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் அது ஒளிர்விடுவதோடு, சுயநலன்களிலிருந்து விடுதலை வழங்கி, துன்ப வேளைகளில் நம்பிக்கையையும் வழங்குகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மகனின் மரணத்தையும் உயிர்ப்பையும் கண்ட அன்னை மரியின் இதயம் தற்போது அமைதி, ஆறுதல், நம்பிக்கை மற்றும் கருணையின் ஆதாரமாக மாறியுள்ளது எனவும் எடுத்துரைத்தார்.
இயேசுவோடு இறந்து அவரோடு உயிர்த்த நம் அன்னைமரி, துயரங்களின் தாயாக இருக்கும் அதேவேளை, நம்பிக்கையின் தாயாகவும் உள்ளார் எனவும் கூறிய திருத்தந்தை, எச்சூழலிலும் தன் நம்பிக்கையை இழக்காத அன்னைமரி, திருத்தூதர்களின் தாயாகவும் திருஅவையின் தாயாகவும் உள்ளார் என்றார்.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்புக்கு மௌனச் சாட்சியாக இருந்த அன்னைமரி, நம்மையெல்லாம் உயிர்ப்பின் மகிழ்வு நோக்கி அழைத்துச் செல்லவேண்டும் என வேண்டுவோம் எனக்கூறி, அனைவருடன் இணைந்து அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தைச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இயேசுவுடன் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்திப்பின்போதும், கடவுள் மட்டுமே வழங்கவல்ல ஆழமான மகிழ்வால் நிறைக்கப்படுகிறோம்’ என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.