2014-04-20 14:53:28

திருத்தந்தையின் பாஸ்காத் திருவிழிப்பு மறையுரை - நம் ஒவ்வொருவர் வாழ்விலும் 'கலிலேயா' உள்ளது


ஏப்.20,2014. ஏப்ரல் 19, புனித சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாஸ்காத் திருவிழிப்புத் திருச்சடங்கைத் தலைமையேற்று நடத்தினார். இத்திருச்சடங்கின் இறுதிக் கட்டமாக நிகழ்ந்த திருப்பலியில், திருத்தந்தை மறையுரையாற்றியபோது, திருத்தூதர்களும், சீடர்களும் கலிலேயாவில் இயேசுவைச் சந்திக்கும்படி விடுக்கப்பட்ட அழைப்பை மையப் பொருளாகப் பகிர்ந்தார். திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கத்தைக் கேட்போம்:
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றிய நற்செய்தி, அவரது கல்லறைக்குச் சென்ற பெண்களின் பயணத்தில் துவங்கியது. கல்லறையை நெருங்கிய பெண்களை வானதூதரும், பின்னர், இயேசுவும் சந்தித்து, அவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை வழங்கினர்: “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” (மத்தேயு 28: 10) என்பதே அச்செய்தி.
அனைத்தும் முடிந்துவிட்டதென மனமுடைந்து போயிருந்தச் சீடர்களின் மனங்களில், பெண்கள் கொணர்ந்த செய்தி நம்பிக்கை ஒளிக்கீற்றாக அமைந்தது.
கலிலேயாவுக்கு செல்லும்படி ஏன் அவர்கள் பணிக்கப்பட்டனர்? அங்குதான், இயேசு சீடர்களை முதன்முறை சந்தித்து, அழைப்பு விடுத்தார்; அங்குதான் சீடர்களின் வாழ்வில் மாற்றங்கள் துவங்கின.
சீடர்கள் இயேசுவுடன் பயணத்தைத் துவங்கிய கலிலேயாவுக்குச் சென்று, அங்கு இயேசுவின் பாடுகளையும், அவர் அடைந்த வெற்றியையும் மறு பார்வையிட இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கின்போது கிறிஸ்தவர் என்ற அடையாளம் பெற்றாலும், தனிப்பட்ட வகையில் நம் ஒவ்வொருவரையும் இயேசு சந்தித்த ஒரு சிறப்புத் தருணம் உள்ளது. அதுதான் நமது 'கலிலேயா'.
நம் ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ள இந்த 'கலிலேயா'வில்தான், இயேசுவின் அழைப்பு முதன்முதல் நமக்குக் கிடைத்தது; அவர் அன்பை உணர்ந்து, அவரைப் பின்தொடர நமக்கு உறுதி பிறந்தது.
உயிர்ப்புப் பெருவிழாவின் நற்செய்தி நமக்குத் தெளிவாகக் கூறுவது இதுதான்: நாம் எங்கு இயேசுவை முதலில் சந்தித்து, நமது மனங்களை மகிழ்வெனும் ஒளியால் நிறைத்தோமோ, அங்கு மீண்டும் சென்று, அக்கணங்களை மீண்டும் வாழ நமக்கு அழைப்பு விடப்படுகிறது.
'கலிலேயா' என்பது, பிற இனத்தவர் வாழும் பகுதி என்று விவிலியத்தில் கூறப்பட்டிருப்பதை (மத்தேயு 4:15; எசாயா 8:23) தன் மறையுரையின் இறுதியில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கலிலேயா' என்பது, உயிர்த்த ஆண்டவரின் எல்லை, அதுதான் திருஅவையின் எல்லை, அங்கு உயிர்த்த இயேசுவை மீண்டும் சந்திக்கும் ஆவல் எழுகிறது என்பதை எடுத்துரைத்து, "வாருங்கள் நாம் அங்கு செல்வோம்" என்ற வார்த்தைகளுடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.