2014-04-18 13:30:32

திருத்தந்தை பிரான்சிஸ் – இயேசுவின் பிரியாவிடை பரிசு, ஓர் அடிமை, அன்புடன் வழங்கியப் பரிசு


ஏப்.18,2014. இயேசு நமக்குப் பிரியாவிடை பரிசாக அளித்துச் சென்ற பரிசு, ஓர் அடிமை, அன்புடன் வழங்கியப் பரிசு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மாற்றுத் திறனாளிகளையும், வயதில் முதிர்ந்தோரையும் கண்காணிக்கும் 'பராமரிக்கும் புனித மரியன்னை' என்ற பெயர் கொண்ட காப்பகத்தில் இவ்வியாழன் மாலை 5.30 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இயேசுவின் இறுதி இரவுணவு' திருப்பலியை நிகழ்த்தினார்.
அத்திருப்பலியில், சீடர்களின் காலடிகளை இயேசு கழுவிய அன்புச் செயலை மையமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறுகியதொரு மறையுரையை வழங்கினார்.
இயேசு வாழ்ந்த காலத்தில், தெருக்கள் மண் பாதைகளாக இருந்ததால், வீட்டுக்குள் வருவோரின் பாதங்கள் புழுதி படிந்திருந்தன என்றும், எனவே அவர்கள் விருந்தில் அமர்வதற்கு முன், அவர்கள் காலடிகளைக் கழுவுவது அடிமைகளின் பணி என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
இயேசு ஓர் அடிமையாக மாறி, தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியதைப் போல, நாமும் மற்றவர்களுக்குப் பணிவிடை புரிய அழைக்கப்பட்டுள்ளோம்; அப்பணியை எவ்விதம் முழுமனதோடு ஆற்றமுடியும் என்பதைச் சிந்திக்க புனித வியாழன் நமக்கு வாய்ப்பளிக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.