2014-04-15 16:21:51

விவிலியத்
தேடல் பரிசேயரும் வரிதண்டுபவரும் உவமை பகுதி - 4


RealAudioMP3 ஆன்மீக எண்ணங்களை, தன் உரைகள் வழியாகவும், நூல்களாகவும் வழங்கிவரும் T.T.ரங்கராஜன் என்பவர், 'தாயம்' என்ற நூலில் ஒரு சிறுகதை கூறியுள்ளார். இயேசு கூறிய 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற உவமையில், பரிசேயர் தன் அருமை பெருமைகளை ஆண்டவன் முன் அறிக்கையிட்டுக் கூறிய வார்த்தைகளை சிந்திக்கும்போது, இக்கதை என் நினைவுக்கு வருகிறது. ரங்கராஜன் அவர்கள் கூறும் கதை இதுதான்:
"குருவே, தயவு செய்து என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று ஒருவர் கூறினார். "நீ யார் என்பதை எனக்குச் சொல்," என்று குரு கேட்டார். "ராமச்சந்திர ராவ்" என்று அவர் பதிலளித்தார். "அது உன் பெயர். அதை உதறிவிட்டு நீ யார் என்பதை எனக்குச் சொல்," என்று குரு மீண்டும் கேட்டார். "நான் ஒரு தொழிலதிபர்," என்று அவர் கூறினார். "அது உன் தொழில். அதை விட்டுவிட்டு, நீ யார் என்பதைக் கூறு."
"நான் ஓர் ஆண்."
"அது உன் பாலினம். அதை அகற்றிவிட்டு நீ யார் என்பதைக் கூறு."
"குருவே, இப்போது நான் யார் என்பது எனக்குத் தெரியவில்லை!"
"மிகவும் நல்லது, இதுதான் தேடுபவனுக்கான துவக்கப் பள்ளி. உன் முத்திரைகள் அனைத்தையும் களைந்துவிட்டு, நீ நீயாக மட்டும் வருகிறாய் அல்லவா, அதுதான் தேடுபவனின் துவக்கப் பள்ளி. உன் பெயர் அச்சிடப்பட்ட அட்டை பூசாரிகளிடம் வேலை செய்யும். ஆனால் கடவுளிடம் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது," என்று குரு வலியுறுத்தினார்.
நிறுவனங்களில் பணிபுரிவோர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர் ஒருவர் ஒருவரைச் சந்திக்கும்போது, 'விசிடிங் கார்ட்' என்று சொல்லப்படும் அடையாள அட்டைகளைப் பரிமாறிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். தங்கள் பெயர்கள், வாங்கியப் பட்டங்கள், வகிக்கும் பதவிகள் என்ற பல அடையாளங்கள் இந்த அட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும். அந்த அட்டைகள் எவ்வளவுக்கு எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் முக்கியமானவர்கள் என்பது பொதுவான கணிப்பு.
இத்தகைய அடையாள அட்டைகள் மனிதர்கள் மத்தியில் அறிமுகமாவதற்கு உதவுகின்றன. ஆனால், கடவுளிடம் இது தேவையா? தேவை என்பது போல உணர்ந்த பரிசேயர், கடவுளிடமும் தன் 'விசிடிங் கார்ட்'டை நீட்டினார். கோவிலின் முன்பகுதியில், தலைநிமிர்ந்து நின்றபடி, தன் அடையாள அட்டைகளை, இறைவனிடம் கூறும் சாக்கில், கோவிலில் இருந்த அனைவருக்கும் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார் பரிசேயர். அவர் பயன்படுத்திய இந்த விளம்பரத்தை, சிறு, சிறு வாக்கியங்களாகப் பிரித்து, ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள், கூடுதலான ஒரு தெளிவைத் தருகின்றனர். பரிசேயர் சொன்ன வார்த்தைகளை இன்னும் சிறிது பிரித்துப் பார்த்தால், நாம் காண்பது இதுதான்:
"கடவுளே, நான் கொள்ளையர் போல் இல்லை
நான் நேர்மையற்றோர் போல் இல்லை,
நான் விபசாரர் போல் இல்லை
நான் மற்ற மக்களைப் போல் இல்லை
நான் இந்த வரிதண்டுபவரை போல் இல்லை
எனவே, நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்;
நான் வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்;
நான் என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.

பரிசேயர் சொன்னதை இவ்வாறு பிரித்துப் பார்க்கும்போது, அதில் "நான்" என்ற எண்ணம் நிரம்பி வழிவதைக் காணலாம். வெ. இறையன்பு, ஐ.ஏ.எஸ். அவர்கள் எழுதியுள்ள ‘ஏழாவது அறிவு - மூன்றாம் பாகம்’ என்ற நூலில், "புகழ்ச்சி - தற்புகழ்ச்சி" என்ற தலைப்பில், கூறியுள்ள இரு சிறு கதைகள், தற்புகழ்ச்சியில் சிக்கிக்கொண்டவர்களின் தலைவலியை அழகாகச் சித்திரிக்கின்றன.
இரண்டு எழுத்தாளர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்தார்கள். முதல் எழுத்தாளர் தற்புகழ்ச்சிக்காரர். தான் எழுதியவற்றைப் பற்றியும், தன்னைப்பற்றியும் ஒரு மணி நேரம் மூச்சுவிடாமல் அடுத்தவரிடம் பேசித் தீர்த்தார்.
அவரும் இதையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறதே என நினைத்து வேறெதையோ நினைத்துக்கொண்டு தலையாட்டினார்.
பேசி முடித்த தற்புகழ்ச்சிக்காரர், "எவ்வளவு நேரம் நானே என்னைப்பத்திப் பேசிக்கிட்டிருக்கிறது? இனிமே நீங்க என்னைப் பத்திப் பேசுங்க" என்றார் நிதானமாக.

இறையன்பு அவர்கள் கூறும் அடுத்தக் கதை இதோ:
ஒரு மேடையில் சிறப்பு விருந்தினரை வானளாவப் புகழ்ந்துகொண்டே இருந்தார் ஒரு பேச்சாளர். ஐந்து நிமிடம் கழித்து, அந்தச் சிறப்பு விருந்தினர் எழுந்து, "தயவு செய்து என்னைப் புகழாதீர்கள்" என்றார். அருகிலிருந்தவர் "ஏன் ஐந்து நிமிடமாக ஒன்றும் சொல்லவில்லை?" என்றார். அதற்குச் சிறப்பு விருந்தினர், "நானே அதில் மயங்கிப் போய் மெய்மறந்துவிட்டேன், அதனால்தான்" என்றார்.

தன்னைப் பற்றிய சிந்தனைகளில் தன்னையே மறந்துபோன பரிசேயர், தான் பேசுவது கடவுள் முன்னிலையில் என்பதையும் மறந்து பேசினார். அவர், "கடவுளே" என்ற வார்த்தையுடன் ஆரம்பித்தாலும், அவர் சொன்னதெல்லாம் தன்னைப் பற்றிய பறை அறிவிப்பு மட்டுமே. இந்தப் பறை அறிவிப்பில் அவர், கடவுளுக்கு நன்றியும் சொல்கிறார். அவரது தற்புகழ்ச்சியைக் கேட்டு, தலைகுனியும் நாம், அவர் நன்றி சொல்வதற்கான காரணத்தைக் கண்டு, மேலும் தலை குனிகிறோம். சங்கப்படுகிறோம்.

தன்னை தனித்துவம் மிகுந்த ஒருவராகத் உருவாக்கியதற்காக அவர் இறைவனுக்கு நன்றி சொல்லியிருந்தால், அவரது நன்றி உண்மையிலேயே ஒரு நன்றி செபமாக எழுந்திருக்கும். ஆனால், அவர், ‘நான் அவரைப் போல், இவரைப் போல் இல்லை’ என்று, மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன் தனித்துவத்தைக் குறிப்பிட்டது, ஏற்றுக்கொள்ள முடியாதது. அதை ஒரு செபம் என்று கூறவும் தயக்கமாக உள்ளது. ஒருவர் தன்னிடம் உள்ள நன்மைகளை எண்ணி நிறைவு கொள்வதால் எழும் நன்றி உணர்வுகள், உண்மையான, தகுதியான நன்றி. தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு அகந்தை கொள்வதால் சொல்லப்படும் நன்றி, நன்றியல்ல.

மனித உணர்வுகளில் மிக உயர்ந்ததோர் இடத்தில் இருப்பது நன்றி உணர்வு. எனவே உலகின் எல்லா மதங்களிலும் இந்த உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால், மதங்களின் உயிர்நாடிகளில் ஒன்று, நன்றி.
விவிலியத்தில், நன்றி என்ற உணர்வு, சொல் வடிவில் கூறப்பட்டுள்ளது. ‘நன்றி’ என்ற சொல்லை பயன்படுத்தாமலேயே நன்றி உணர்வை வெளிப்படுத்தும் பல அழகிய பகுதிகளும் விவிலியத்தில் உள்ளன. "ஆண்டவர் என் ஆயன்" என்ற 23ம் திருப்பாடலில் 'நன்றி' என்ற வார்த்தை ஒருமுறையும் இடம்பெறவில்லை என்றாலும், அந்த பாடல் முழுவதும் இறைவனுக்கு நன்றி கூறும் ஒரு பாடல் என்பதை இவ்வுலகம் அறியும். அதேபோல், அன்னை மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது, "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது" என்று பாடிய அப்பாடலில் (லூக்கா 1: 47-55), 'நன்றி' என்ற வார்த்தை ஒருமுறை கூடப் பயன்படுத்தப்படவில்லை.
இருப்பினும், அன்னை மரியாவின் புகழ்பாடல், (Magnificat), கிறிஸ்தவ பாரம்பரியத்தில், ஒரு நன்றிப் பாடலாக, பல வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும், குறிப்பாக, அர்ப்பண வாழ்வின், அல்லது திருமண வாழ்வின் வெள்ளி, பொன், வைர விழாக்களைக் கொண்டாடும் வழிபாடுகளில் இப்பாடல் நன்றிப் பாடலாக இன்றும் ஒலிக்கின்றது.
அன்னை மரியாவும், திருப்பாடல் ஆசிரியரும் கூறும் வார்த்தைகளில், இறைவன் தங்களுக்குச் செய்தவற்றைப் பட்டியலிட்டுப் புகழ்கின்றனர். பரிசேயரோ, இறைவனிடம் கூறும் வார்த்தைகளில், தான் எதோ இறைவனுக்குச் செய்துவிட்டதைப் போன்ற உணர்வுடன், ஒரு பட்டியலை வெளியிட்டு, அவருக்கு நன்றி சொல்கிறார். அன்னை மரியாவும், திருப்பாடல் ஆசிரியரும் இறைவனை மையப்படுத்தி சொன்ன வார்த்தைகள், மனநிறைவில் உருவான நன்றி செபங்கள். ஆனால், பரிசேயர் தன்னை மையப்படுத்தி, சொன்ன இந்த நன்றி செபம், ‘செபம்’ என்ற சொல்லுக்கே களங்கம் விளைவிக்கிறது.

உண்மையான நன்றி ஒப்புக்காக, சடங்காக சொல்லப்படும் வெறும் வாய் வார்த்தை அல்ல. இது ஒரு மனநிலை. நாம் உலகைப் பார்க்கும் பார்வை எப்படிப்பட்டதென்று சொல்லும் ஒரு மன நிலை இந்த நன்றி உணர்வு.
நன்றி என்ற சொல்லில், அந்த உணர்வில் ஒரு சில அழகான எண்ணங்கள் பொதிந்துள்ளன. முதல் எண்ணம்... நன்றி என்பது நல்லவற்றிற்குச் சொல்லப்படும் ஒரு சொல். ஒரு சில வேளைகளில் தீமை போல வரும் சில பிரச்சனைகளும், பின்னர் நன்மையாய் மாறும்போது, நாம் நன்றி உணர்வு கொள்கிறோம்.
தமிழில் 'நன்றி' என்ற சொல்லைப்போலவே ஒலிக்கும் மற்றொரு சொல் 'நன்று'. இவ்விரு சொற்களையும் இணைத்து நாம் எண்ணிப்பார்க்க நமக்குப் பெரிதும் உதவியாய் இருப்பது நமது 108வது திருக்குறள்:
"நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."
அதேபோல், இத்தாலிய மொழியில், Grazia என்ற சொல் ‘அருளை’க் குறிக்கும்; Grazie என்ற சொல் ‘நன்றி’யைக் குறிக்கும். இறைவனின் அருளும் அதற்கு நாம் பகரும் நன்றியும் ஒன்றோடொன்று இணைந்தது என்பதை Grazia, Grazie என்று ஒரே விதமாக ஒலிக்கும் இவ்விரு வார்த்தைகளும் சொல்வதாக நான் உணர்கிறேன்.

நன்றியைப் பற்றிய இரண்டாவது எண்ணம்... நன்றி உணர்வுக்கு ஊற்று, ஆரம்பம், காரணம் நாம் அல்ல; மற்றவர்களே. Thank YOU என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. Thank ME என்று சொல்வதில்லை. ஒரு முயற்சி எடுத்தோம், வெற்றி பெற்றோம். ஒரு ஆபத்திலிருந்து காப்பற்றப்பட்டோம். இவற்றில் நமது முயற்சி, நமது திறமைகள் வெளிப்பட்டாலும், இறுதியில் நாம் Thank God அதாவது, கடவுளுக்கு நன்றி என்றே அதிகம் சொல்கிறோம். நன்றி உணர்வின் மையம் நாமல்ல. நம்மையும் கடந்த ஒரு சக்தி நமக்குப் பின் நின்று நம்மைக் காத்துள்ளது, வழி நடத்தியுள்ளது என்ற உணர்வு நமக்கு எழுகிறதே... அதுதான் நன்றியுணர்வின் அழகு. நன்றியுணர்வின் ஆரம்பம் நாமல்ல; மற்றவர்களும், கடவுளும்...

நன்றி என்ற சொல்லின், உணர்வின் மூன்றாவது அற்புதம், அழகு என்ன தெரியுமா? அவ்வுணர்வால் அதிக அளவு பயன் பெறுவது நாம்தான். நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு பிறருக்கோ, கடவுளுக்கோ நாம் நன்றி சொல்லும்போது, அதுவும் உதட்டளவில் ஒப்புக்காகச் சொல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் உண்மையான நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, அதைக் கேட்கும் மற்றவர்கள் ஓரளவு மகிழலாம். ஆனால், அந்த உணர்வை வெளிப்படுத்தும் நாம் இன்னும் அதிகம் மகிழ்கிறோம், பெருமளவில் பயன் பெறுகிறோம் என்பது உண்மை.
இவ்விதம் நிறைந்த மனதோடு நன்றி சொல்வது, மன்னிப்பு வழங்குவதைப் போன்றது என்று சொல்கிறார், யுதமத குரு Harold Kushner. நாம் மன்னிப்பைப் பெறும்போதும் வழங்கும்போதும் பெருமளவில் நிம்மதி, ஆறுதல் அடைகிறோம். மனக்காயங்கள் ஆறுகின்றன. அதேபோல், உண்மையான நன்றி உணர்வை வெளிப்படுத்தும்போது, பெருமளவில் நிறைவடைகிறோம், பயனடைகிறோம்.

நன்றி உணர்வையும், மன்னிப்பையும் ஒரு சேர வெளிப்படுத்திய செபம் வரிதண்டுபவர் எழுப்பிய செபம். அச்செபத்தையும் அதன் விளைவையும் அடுத்தத் தேடலில் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.