2014-04-14 16:55:45

நியூ யார்க், மன்ஹாட்டன் பகுதியில், புனித வெள்ளியன்று, Pax Christi அமைப்பினர் நடத்தும் சிலுவைப் பாதை


ஏப்.14,2014. "என் இறைவா, ஏன் எங்களைக் கைவிட்டீர்; ஏன் நாங்கள் ஒருவர் ஒருவரைக் கைவிட்டோம்" என்ற கருத்தில், நியூ யார்க் பெருநகரின், மன்ஹாட்டன் பகுதியில், ஏப்ரல் 18, புனித வெள்ளியன்று, சிலுவைப் பாதை நடைபெறவுள்ளது.
நியூ யார்க் நகரில் பணியாற்றும் Pax Christi அமைப்பினர் கடந்த 32 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இம்முயற்சி, 80க்கும் அதிகமான கிறிஸ்தவ அமைப்புக்களின் ஆதரவுடன், வருகிற வெள்ளியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள 42வது தெரு என்றழைக்கப்படும் முக்கியமான சாலை வழியே நடைபெறும் இச்சிலுவைப்பாதை, இன்றைய உலகில் துன்புறுவோரை மையப்படுத்தி, 15 நிலைகளாக நடைபெறும்.
குடியுரிமையற்றோர், புலம்பெயர்ந்தோர், மனித வர்த்தகத்தால் துன்புறுவோர், பசித்திருப்போர், வீடற்றோர், இனவெறியாலும், மற்ற பிரிவினை வெறிகளாலும் துன்புறுவோர் என்று, இவ்வுலகில் நிலவும் பல்வேறு அநீதிகளை, Pax Christi அமைப்பினர் இந்தச் சிலுவைப்பாதையில் மையப்படுத்தத் தீர்மானித்துள்ளனர்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.