2014-04-12 16:20:09

மனிதரின் மாண்பும் மதிப்பும் தொடக்க முதல் இறுதிவரை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.12,2014. ஒருவரின் நோயை முழுமையாய்க் குணமாக்கும் பணியில், இறைவனின் சாயலாகவும், உருவாகவும் படைக்கப்பட்டுள்ள மனிதர் உடலையும் ஆன்மாவையும் கொண்டிருப்பவர் என்பது மறக்கப்படக் கூடாது என இச்சனிக்கிழமையன்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புற்றுநோய் அறுவைச் சிகிச்சை குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட 120 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல், ஆன்மா இந்த இரு கூறுகள் குறித்து வேறுபடுத்திக் காட்டலாம், ஆனால் அவை இரண்டும் பிரிக்க முடியாதவை, ஏனெனில் மனிதர் ஒருவரே என்றும் கூறினார்.
வேதனைகளையும், துன்பங்களையும் கொணரும் நோய், மனிதரின் உடலை மட்டுமல்ல, முழு மனிதனையும் பாதிக்கிறது என்பதால், நோய்க்குச் சிகிச்சை அளிக்கும்போது, நோயாளியின் மனித, மனநல, சமூக மற்றும் ஆன்மீகக் கூறுகளைக் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நோயாளியோடு சகோதரத்துவ அன்பைப் பகிர்ந்து கொள்ளும்போது, மனித வாழ்வின் உண்மையான அழகு நமக்குத் திறக்கப்படுகின்றது எனவும், மனிதரின் நிலைமை எந்நிலையில் இருந்தாலும், மனிதரின் பிறப்பு முதல் இயற்கையான இறப்புவரை, மனிதர் என்ற அவரின் மாண்பும் மதிப்பும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று புனித வாரம் தொடங்குகிறது, அப்பாவி மக்கள் துன்புறுவதன் பொருளை கிறிஸ்து மட்டுமே தருகிறார், உங்களின் அன்றாடப் பணிகளில், சிலுவையில் அறையுண்டு உயிர்த்த கிறிஸ்துவை நோக்குங்கள், வியாகுல அன்னை, உங்களிலும், உங்களின் ஆய்வுப் பணிகளிலும் உடன் இருப்பாராக என்று இப்பிரதிநிதிகளிடம் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.