2014-04-12 16:21:02

புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு உலகத் தலைவர்கள் முயற்சிக்குமாறு பான் கி மூன் வலியுறுத்தல்


ஏப்.12,2014. புவி வெப்பமடைந்து வருவதைத் தடுக்கின்ற போராட்டத்தில் "எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான ஒரு கட்டத்தை" மனித குலம் தற்போது எதிர்கொள்கிறது என்பதை உலக தட்பவெப்பநிலை மாற்றம் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிக்கை எடுத்துக் காட்டுவதாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் எச்சரித்துள்ளார்.
முன்பு கருதப்பட்டதைவிட புவி வேகமாக வெப்பமடைந்து வருவதாக பருவநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு நிபுணர் குழு கண்டறிந்த விடயங்கள் தெளிவாகக் காட்டுவதாக வாஷிங்டனில் நடந்த அனைத்துலக நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இஞ்ஞாயிறன்று வெளியிடப்படவுள்ள இந்த நிபுணர் குழுவின் வரை வடிவம் ஒன்று இந்தக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
குறைவான கரிம வெளியேற்றத்துக்கான தொழில்நுட்பத்தை நாம் பரவலாகப் பயன்படுத்த நூறாயிரம் கோடி டாலர்கள் அளவில் முதலீடு தேவை என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
பெட்ரோலிய எரிபொருட்களில் இருந்து நாம் வேறொரு எரிசக்திக்கு மாறுவதென்பது உலக பொருளாதார வளர்ச்சியை ஆண்டொன்றுக்கு ஒரு விழுக்காடு என்ற அளவில் மந்தமாக்கிவிடும் என அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : UN/BBC








All the contents on this site are copyrighted ©.