2014-04-12 16:20:16

திருத்தந்தை பிரான்சிஸ் : வரலாறு வாழ்வின் ஆசிரியர்


ஏப்.12,2014. திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்களால் தொடங்கப்பட்ட திருப்பீட சமூக அறிவியல் கழகத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 25 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வரலாறு வாழ்வின் ஆசிரியர் என்றும், வரலாற்றை ஆய்வு செய்வது, மனிதரின் மனதை எப்போதும் நிரப்பியுள்ள உண்மையை ஆர்வத்துடன் தேடும் வழிகளில் ஒன்றாக உள்ளது என்றும் இவ்வுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவைமீது கொண்டுள்ள உண்மையான பற்றாலும், உண்மைமீது கொண்டுள்ள நேர்மையான அன்பாலும் இக்கழகத்தினர் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதாக உரைத்த திருத்தந்தை, இன்று திருஅவைக்கு, தூய ஆவி சொல்ல விரும்புவதைத் தேர்ந்துதெளியும் பணியைச் செய்பவர்களுக்கு இந்த ஆய்வுகள் அதிக உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.
திருஅவைக்கும், இந்நவீன உலகுக்கும் இடையே உரையாடல் இடம்பெறுவதற்கு இக்கழகத்தினர் பெரும் உதவிகளைச் செய்ய முடியும் என்றும் உரைத்த திருத்தந்தை, முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு இக்கழகத்தினர் நடத்தத் திட்டமிட்டிருக்கும் அனைத்துலக கருத்தரங்கு பற்றியும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.