2014-04-12 16:20:23

சிலுவையின் முன்னே நின்று ஆண்டவரைப் பார்த்துக்கொண்டிருப்பது எத்துணை அழகானது, திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.12,2014. முழுவதும் அன்பே வடிவான ஆண்டவரை, சிலுவையின் முன்னே நின்று பார்த்துக்கொண்டிருப்பது எத்துணை அழகானது என்று, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், 29வது உலக கத்தோலிக்க இளைஞர் தினமான இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குருத்தோலை பவனியை நடத்தி குருத்தோலை ஞாயிறு திருப்பலியை நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இக்குருத்தோலை பவனியில் கர்தினால்கள், ஆயர்கள், பொதுநிலையினர் எனப் பலர் எடுத்துச் செல்லும் மற்றும் பலிபீடத்தில் வைக்கப்படும் ஏறத்தாழ மூவாயிரம் அலங்கரிக்கப்பட்ட குருத்தோலைகளை இத்தாலியின் சன்ரேமோ நகராட்சி நன்கொடையாக வழங்கியுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அலங்கரிக்கப்படும் ஒலிவக் கிளைகள் மற்றும் ஒலிவ மரங்களை, இத்தாலியின் பூல்யா பகுதியினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இம்மக்கள், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து இதனை வழங்கி வருகின்றனர்.
இவ்வாண்டு, 29வது உலக கத்தோலிக்க இளைஞர் தினம், மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படுகின்றது.
மேலும், இத்தாலியின் சன்ரேமோ சிறைக் கைதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கிய எளிமையான, ஒலிவ மரச் செங்கோலை குருத்தோலை ஞாயிறன்று பயன்படுத்துவார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.