குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது, பெரும் ஆபத்தை முன்வைக்கின்றது, ஐ.நா.வில்
வத்திக்கான் பிரதிநிதி
ஏப்.12,2014. உலகம் முழுவதும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது, பெரும் ஆபத்தை
முன்வைப்பதாக, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் எச்சரித்தார்.
மக்கள் தொகையும் வளர்ச்சியும் குறித்த 47வது ஐ.நா. அமர்வில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான
திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் அவர்கள், குறைந்தது
எண்பது நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பது ஆபத்தான நிலை என்று
கூறினார். குடும்பமும், மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும்,
மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள் கைவிடப்பட வேண்டும்,
கருத்தாங்குதல் ஒரு நோய் அல்ல என்றும் கூறினார் பேராயர் சுள்ளிக்காட். கல்வி, பொருளாதார
வளர்ச்சி, நிலையானதன்மை, நலவாழ்வு, குடும்ப வாழ்வு ஆகியவற்றை ஆதரிக்கும் வளர்ச்சித் திட்டங்களை
வலியுறுத்த, நியாயமான அணுகுமுறைகள் அவசியம் என்றும் கூறினார் பேராயர் சுள்ளிக்காட்.