2014-04-12 15:55:18

குருத்து ஞாயிறு மத்தேயு நற்செய்தி 21: 1-11


இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, “நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ‘இவை ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்” என்றார். ‘மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்’ என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர்.








All the contents on this site are copyrighted ©.