2014-04-11 16:27:51

வெனெசுவேலாவின் அரசியல் நெருக்கடிகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுமாறு திருத்தந்தை வேண்டுகோள்


ஏப்.11,2013. வெனெசுவேலா நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் அரசியல் நெருக்கடிகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான ஒரு தீர்வைக் காணுமாறு அந்நாட்டின் அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் அரசுத்தலைவர் Nicolas Maduroவுக்கும், சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இவ்வியாழன் இரவு அமைதிக்கானப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதையடுத்து அந்நாட்டுக்கென அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை அப்பேச்சுவார்த்தை அமர்வில் வாசித்தார் வெனெசுவேலா நாட்டுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் ஆல்தோ ஜொர்தானோ.
வெனெசுவேலாவில் நிறைய மக்கள் அனுபவித்துள்ள வேதனைகளையும் பதட்டநிலைகளையும் தன்னால் உணர முடிகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, அம்மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
வன்முறை ஒருநாளும் அமைதியைக் கொண்டு வராது, மாறாக, அது மேலும் அதிகமான வன்முறைக்கே இட்டுச்செல்லும் என்பதில் தான் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையையும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.