2014-04-10 16:27:31

மின்கருவி வழியாக பக்கவாதத்தை குணப்படுத்தும் அமெரிக்கச் சாதனை


ஏப்.10,2014. மின்கருவி வழியாக பக்கவாதத்தை குணப்படுத்தி அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மார்புக்கு கீழே செயலிழந்து ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் இருந்த நான்கு நோயாளிகளுக்கு முதுகுத் தண்டில் மின்கருவி பொருத்தப்பட்டதால், அவர்கள், கால்களையும், பாதங்களையும் அசைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
மிகக் குறைவான அளவிலேயே இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றபோதிலும் இந்த புதிய முயற்சி பக்கவாத நோயினால் முடங்கியுள்ள 60 இலட்சம் அமெரிக்கர்களுக்கு, குறிப்பாக முதுகுத்தண்டு பிரச்சனையால் அவதிப்பட்டுவரும் 13 இலட்சம் நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையே அளிக்கப்படாத நோயாளிகளுக்குக் கூட இந்த சிகிச்சை முறையில் பலன் கிடைக்கக்கூடும் என்று அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்தப் புதிய முறையின் மூலம் முதுகுத்தண்டு பிரச்சினைகளால் பக்கவாதம் ஏற்படும்போது, அதனை வாழ்நாள் தண்டனையாக அனுபவிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று மருத்துவர் Roderic Pettigrew அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இவர் அமெரிக்க உள்நாட்டு நலவாழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் உயிர் மருத்துவவியல் இமேஜிங் மற்றும் உயிர்பொறியியல் தேசிய நிறுவனத்தின் (National Institute of Biomedical Imaging and Bioengineering) இயக்குனராகப் பணியாற்றி வருகின்றார்.
நடக்க முடியாது என்ற போதிலும், தன்னார்வ செயல்பாடுகள் சிலவற்றை அவர்களால் மேற்கொள்ளமுடியும் என்றும், முதுகுத்தண்டு காயங்களுக்கான ஆய்வில் இச்சிகிச்சை ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் மருத்துவர் Pettigrew அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : Reuters








All the contents on this site are copyrighted ©.