2014-04-10 16:22:03

திருத்தந்தை பிரான்சிஸ் : கொடுங்கோல் எண்ணங்கள் மனச்சான்றின் சுதந்திரத்தை நெருக்குகின்றன


ஏப்.10,2014. இன்றைய உலகில் மக்களின் சுதந்திரத்தையும், மனச்சான்றையும் கட்டுப்படுத்தும் கொடுங்கோல்தன்மை கொண்ட எண்ணங்கள் நிலவுகின்றன என்றும், எனவே விழிப்பாயிருந்து செபிப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியான் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், ஆபிரகாமுடன் இறைவன் கொண்ட உடன்படிக்கையையும், பரிசேயர்கள் இயேசுவுடன் மேற்கொண்ட உரையாடலையும் தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
சட்டங்களைக்கொண்டு மூடப்பட்ட மனங்களில் இறைவன் நுழைவதற்கும், இறைவனின் வார்த்தை ஒலிப்பதற்கும் வாய்ப்பின்றிப் போகின்றது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
சட்டங்களின் பாரத்தை மக்கள்மீது சுமத்தும் மதத்தலைவர்கள், தாங்கள் அப்பாரத்தைச் சுமக்காததை இயேசு கண்டித்தார் என்பதையும் திருத்தந்தை தனது மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
இறைவனோடு உரையாடும் வழிகளை அமைத்துத் தந்த இறைவாக்கினர்களைக் கொலைசெய்த மக்களைப் போலவே, வரலாற்றில் பல கொடுங்கோலர்கள் மாற்றுக்கருத்து கொண்டவர்களைக் கொலை செய்தனர் என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகில் நிதி உதவிசெய்யும் பல நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது நாம் சந்தித்துவரும் கொடுங்கோல் ஆட்சியே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
மேலும், மனிதப் பரிதாபங்களைத் தொடுவதற்கு, துன்புறும் நம் சகோதர, சகோதரிகள் வழியாக அவரது உடலைத் தொடுவதற்கு நாம் வெட்கப்படக் கூடாது என்று இயேசு சொல்லித்தருகிறார் என்ற Twitter செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார். திருத்தந்தை அவர்கள் கடந்த ஆண்டு வெளியிட்ட நற்செய்தியின் மகிழ்ச்சி (Evangelii Gaudium) என்ற திருத்தூது அறிவுரையிலிருந்து இந்த வார்த்தைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.