2014-04-10 16:22:15

திருத்தந்தை பிரான்சிஸ் - மனித வர்த்தகம், இன்றைய உலகின் மீது பதிந்துள்ள திறந்த காயமாக உள்ளது


ஏப்.10,2014. மனித வர்த்தகம் என்பது, இன்றைய உலகின் மீது பதிந்துள்ள திறந்த காயமாக, சாட்டையடியாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகின் பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித வர்த்தகத்தைத் தடுக்கும் ஒரு முயற்சியாக, திருப்பீட சமூக அறிவியல் கழகம் உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருக்கும் 120க்கும் அதிகமான பிரதிநிதிகளை இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனித வர்த்தகத்தை, சட்டங்கள் வழியே தடுத்து நிறுத்தும் அதிகாரிகள், அத்தகைய வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களை விடுவித்து, மறுவாழ்வு தரும் சமுதாய ஆர்வலர்கள் இருவரும் இக்கருத்தரங்கில் கூடிவந்திருப்பது நம்பிக்கை தருகிறது என்று கூறினார் திருத்தந்தை.
கடந்த ஆண்டு நடைபெற்ற இக்கூட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை உரோம் நகரில் பன்னாட்டுப் பிரதிநிதிகள் கூடிவந்திருப்பது, இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொணரும் ஆர்வத்தைக் காட்டுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
சட்டங்கள் வழியாகவும், மனிதாபிமான முயற்சிகளாலும் இந்த சமுதாய அவமானத்தைத் தீர்க்கும் அனைத்து முயற்சிகளையும் திருஅவை ஆதரிக்கும் என்ற உறுதியை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் செபம் கலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.