2014-04-09 16:29:31

பிற மத நம்பிக்கை கொண்டவர் மத்தியிலும் திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் உயர்ந்த மதிப்பு பெற்றுள்ளனர் - வத்திக்கான் நாளிதழ்


ஏப்.09,2014. உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் மனங்களில் மட்டுமல்ல, ஏனைய கிறிஸ்தவர்கள் மனங்களிலும், இன்னும் பிற மத நம்பிக்கை கொண்டவர் மத்தியிலும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் உயர்ந்த மதிப்பு பெற்றுள்ளனர் என்று வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano கூறியுள்ளது.
"Roncalli மற்றும் Wojtyla ஆகியோரின் ஆசிய வழி" என்ற தலைப்புடன் வத்திக்கான் நாளிதழில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரை, புனிதர்களாகவிருக்கும் இவ்விரு திருத்தந்தையரும் ஆசியாவின் மீது காட்டிய ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டியதால் வரலாற்றில் இடம்பெற்றுள்ள திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், ஆசிய மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு, உரையாடல் என்ற கருத்துக்களை இந்தச் சங்கத்தில் அறிமுகப்படுத்தினார் என்று இக்கட்டுரை ஆசிரியர் James Channan அவர்கள் கூறியுள்ளார்.
"உலகில் அமைதி" (Pacem in Terris) என்ற முக்கியமான சுற்றுமடலை எழுதியத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இந்த மடலை உலகில் உள்ள நல்மனம் கொண்ட அனைவருக்கும் என்று எழுதியது, ஆசிய மக்களைப் பெரிதும் கவர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது.
மதச் சுததிரத்தையும், மதங்களுக்கிடையே உரையாடலையும் பெரிதும் ஊக்குவித்த திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், ஆசியக் கண்டத்தில் பல முறை பயணங்களை மேற்கொண்டு, ஆசிய மக்களின் மனங்களில் முக்கிய இடம்பெற்றுள்ளார் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
இவ்விரு திருத்தந்தையர்களும் புனிதர்களாக உயர்த்தப்படும் நிகழ்வு, ஆசிய மக்களுக்கு முக்கியமான ஒரு நிகழ்வாக அமையும் என்று, கட்டுரை ஆசிரியர், James Channan அவர்கள், தன் கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.