2014-04-09 16:28:11

சிரியாவில் கொல்லப்பட்ட அருள் பணியாளர் Van der Lugt, சிரிய மக்களின் கலாச்சாரத்தில் தன்னையே முழுமையாக கரைத்துக் கொண்டவர்


ஏப்.09,2014. சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஒருங்கிணைப்பதில் தன் வாழ்வை செலவிட்ட அருள் பணியாளர் Frans Van der Lugt அவர்கள், சிரிய மக்களின் கலாச்சாரத்தில் தன்னையே முழுமையாக கரைத்துக் கொண்டவர் என்று இயேசு சபை அருள் பணியாளர் பிமல் கெர்கெட்டா அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 7 இத்திங்களன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Van der Lugt அவர்களைப் பற்றி, எகிப்தில் மறைப்பணியாற்றிவரும் இந்திய அருள் பணியாளர் கெர்கெட்டா அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
மத வேறுபாடுகள் ஏதுமின்றி உழைத்த அருள் பணியாளர் Van der Lugt அவர்கள், மாற்றுத் திறன் கொண்ட கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் ஆகியோருக்கு ஆற்றியச் சிறப்புப் பணிகளையும், சிரியாவின் பெண்களுக்கு ஆற்றியக் கல்விப் பணியையும், அருள் பணியாளர் கெர்கெட்டா அவர்கள் குறிப்பிட்டுப் பேசினார்.
1938ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி பிறந்த அருள் பணியாளர் Van der Lugt அவர்கள், இவ்வியாழனன்று தன் 76வது வயதை நிறைவு செய்திருப்பார் என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்ட அருள் பணியாளர் கெர்கெட்டா அவர்கள், சிரியாவுக்கு, தானும் சென்று உழைக்கத் தாயாராக இருப்பதாகக் கூறினார்.
அருள் பணியாளர் Van der Lugt அவர்கள் கொலைசெய்யப்பட்டது, கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, இஸ்லாமியர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்று சிரியாவில் பணியாற்றும் ஆர்மீனிய கத்தோலிக்க அருள் பணியாளர் Joseph Bazuzu அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இயேசு சபை அருள் பணியாளர் Van der Lugt அவர்களின் மறைவு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் மறையுரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டபோது, அவர் இயேசு சபையில் தன் உடன்பிறந்தவர் என்று கூறியதோடு, சிரியாவில் அமைதி நீடிக்க அனைவரும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.