2014-04-08 15:24:30

லூத்தர் திருஅவையில் பிரிவினையை அல்ல, புதுப்பித்தலை ஊக்குவிக்க விரும்பினார், பேராயர் Hughes


ஏப்.08,2014. பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் லூத்தரன் கிறிஸ்தவ சபையினருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையே கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் உரையாடல்கள் குறிப்பிடத்தக்க உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன என்று, New Orleansன் ஓய்வுபெற்ற பேராயர் Alfred C. Hughes கூறினார்.
Kenner கிறிஸ்து அரசர் லூத்தரன் சபை ஆலயத்தில் நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் Hughes, ஜெர்மானிய கத்தோலிக்கத் துறவியான மார்ட்டின் லூத்தர் குறித்து கத்தோலிக்கர் மீண்டும் சிந்திப்பதற்கு இந்த உரையாடல்கள் உதவியுள்ளன எனவும் கூறினார்.
பரிபூரணபலன்களின் வல்லமை மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் குறித்து, புனித அகுஸ்தீன் சபை துறவியான மார்ட்டின் லூத்தர் 1517ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி 95 அறிக்கைகளை வெளியிட்டார். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து, அவர், புரோட்டஸ்டாண்ட் சீர்திருத்தத்துக்கு வழி அமைத்தார். இதனால் அவர் கத்தோலிக்கத்தைவிட்டு நீக்கப்பட்டார். அதுவே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சபைகள் தோன்றவும் காரணமாயின.
இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டதன் 500ம் ஆண்டு, 2017ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது.
மார்ட்டின் லூத்தர் திருஅவையில் புதுப்பித்தலை ஊக்குவிப்பதற்கு உண்மையிலேயே ஆவல் கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது என்றும், இந்த அவரது போராட்டம் அவரது வாழ்வை கடுமையாய்க் குழப்பியது என்றும் கூறினார் பேராயர் Hughes.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.