2014-04-08 15:27:51

பரிசேயரும் வரிதண்டுபவரும் உவமை பகுதி - 3


RealAudioMP3 'பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற உவமையில் இயேசு அறிமுகம் செய்துவைக்கும் இருவரும் யார் என்பதை சென்ற விவிலியத்தேடலில் புரிந்துகொள்ள முயன்றோம். இவ்விருவரும் கோவிலில் கூறிய வார்த்தைகளை இன்றையத் தேடலின் மையமாக்குவோம். அவ்விருவரும் வாய்மொழியாகச் சொன்ன வார்த்தைகளைச் சிந்திப்பதற்கு முன், அவர்கள் 'உடல் மொழி'யாய்ச் சொன்னவற்றைச் சிந்திப்பது பயனளிக்கும்.
ஆங்கிலத்தில் 'body language' அதாவது, 'உடல் மொழி' என்ற சொற்றொடரை பயன்படுத்துகிறோம். நாம் வாய்மொழியாகச் சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு நம் எண்ணங்களைப் பிறர் புரிந்துகொள்வர். அதேநேரம், நமது முக பாவங்கள், நாம் பயன்படுத்தும் கண் அசைவு, சைகைகள், நம் குரலில் வெளிப்படும் தொனி ஆகியவை, நாம் சொல்லும் வார்த்தைகளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள பயன்படும். சில வேளைகளில் நாம் வாயால் பேசும் வார்த்தைகளுக்கும் நமது 'உடல் மொழி'க்கும் இடையே முரண்பாடுகளும் எழும். நம்மைக் கேட்பவர்களில் பலர் இந்த முரண்பாட்டையும் புரிந்துகொள்வர்.

பரிசேயரும் வரிதண்டுபவரும் பயன்படுத்திய 'உடல் மொழி'யையும், 'வாய் மொழியை'யும் இயேசு தன் உவமையில் இவ்விதம் விவரிக்கிறார்:
லூக்கா நற்செய்தி 18: 11-13
பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.
ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்என்றார்.

இயேசு விவரிக்கும் இக்காட்சியை நம் கற்பனையில் இன்னும் சிறிது ஆழமாகக் காண முயல்வோம். நம் கற்பனையில் தோன்றும் பரிசேயர், கோவிலுக்குள் நுழைகிறார். பொதுவாக, பரிசேயர்கள், பலர் பார்க்கும் வகையில், பொது இடங்களில் தங்கள் பக்தியை வெளிப்படுத்துவர் என்று இயேசு மலைப்பொழிவில் சொன்னது நினைவுக்கு வருகிறது.
மத்தேயு 6 5
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இயேசுவின் இவ்வார்த்தைகளை இணைத்துச் சிந்திக்கும்போது, தான் கோவிலுக்குள் செல்வதை பலரும் காணும்படி, அல்லது, கோவிலுக்குள் மற்றவர்கள் இருக்கும் நேரம் பார்த்து பரிசேயர் நுழைந்திருப்பார் என்று தீர்மானிக்கலாம். அவர் கோவிலுக்குள் நுழையும்போதே, தன் பின்னே வந்துகொண்டிருந்த வரிதண்டுபவரை ஓரக்கண்களால் பார்த்திருப்பார். வரிதண்டுபவர் அருகில் நிற்பது தன்னைத் தீட்டுப்படுத்தும் என்பதால், அவரிடமிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் தன்னையே தூரப்படுத்தி, பீடத்தை நெருங்கி நின்றிருப்பார் பரிசேயர்.
நின்றுகொண்டு செபிப்பது யூதர்களின் வழக்கம். எனவே, பரிசேயர், கோவிலில் நின்றபடியே செபித்தார் என்பதில் நாம் சிறப்பாக எதையும் பார்க்க முடியாது. ஆனால், இறைவனின் இல்லத்தில், அவர் திருமுன் நிற்கிறோம் என்ற எண்ணம் பரிசேயரின் உள்ளத்தில் எழுந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர் மனதை நிறைத்திருந்ததெல்லாம் 'தான்' என்ற எண்ணங்களே. எனவே, இறைவன் முன் தலைநிமிர்ந்து நின்று இவர் தன் பெருமைகளைப் பட்டியலிடுகிறார்.
அவர், தன் பெருமைகளை உரத்தக் குரலில் கூறியிருப்பார். கடவுளுக்குக் கேட்கவேண்டும் என்பதை விட, கோவிலில் இருந்த மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற எண்ணத்துடன், குறிப்பாக, கோவிலின் வாயிலருகிலேயே நின்றுவிட்ட வரிதண்டுபவருக்குக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் இந்த வார்த்தைகளை பறைசாற்றியிருக்கவேண்டும்.

ஒருவர் தன்னைப் பற்றி உயர்வாகப் பேசுவதை 'தற்புகழ்ச்சி' என்று கூறுகிறோம். தமிழில் இதற்கு மற்றொரு சொற்றொடரும் உண்டு... அதுதான்... 'தம்பட்டம் அடித்தல்'. இந்த சொற்றொடரின் உட்பொருளைத் தேடியபோது எனக்கு வியப்பொன்று காத்திருந்தது.
'தம்பட்டம்' என்பது ஒரு தோல் கருவி. 'சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு கிராமிய இசைக்கருவி' என்று தமிழ் விக்கிப்பீடியா கூறுகிறது. மத வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் இசைக்கருவியைக் குறிக்கும் 'தம்பட்டம்' என்ற வார்த்தை, 'தம்பட்டம் அடித்தல்' என்ற சொற்றொடராக மாறி, தற்பெருமையைச் சுட்டிக்காட்டுவது, ஆச்சரியம் தருகிறது. அதே நேரம், கோவிலில் தன்னையேப் புகழ்ந்து பேசிய பரிசேயரிடம் இச்சொற்றொடரின் முழுப்பொருளையும் உணர முடிகிறது. தன் அருமை பெருமைகளை சப்தமாகக் கூறிய பரிசேயர், 'தம்பட்டம்’ என்ற கருவி இல்லாமலேயே, கோவிலில் 'தம்பட்டம் அடித்தார்' என்று உறுதியாகச் சொல்லமுடியும். பரிசேயரின் சொற்களும், அவரது 'உடல்மொழி'யும் அவரிடமிருந்து நம்மைத் தூரப்படுத்துகிறன. அவரை நெருங்கிச் செல்ல நாம் தயங்குகிறோம்.

இதற்கு மாறாக, வரிதண்டுபவரை நாம் கற்பனையில் காணும்போது, அவரை நெருங்கிச் செல்லும் எண்ணம் நமக்கு எழுவதை உணர்கிறோம். அவர் தொலையில், தலைகுனிந்தபடி நின்று, தன் குற்றங்களை உணர்ந்தவராக, மார்பில் அடித்துக் கொண்டார் என்று இயேசு அவரது 'உடல்மொழி'யை விவரிக்கிறார். இக்காட்சியை மனக்கண்களால் காணும்போது, வரிதண்டுபவரின் அருகில் சென்று ஆறுதல் சொல்லத் தோன்றுகிறது. இத்தகைய ஓர் 'உடல்மொழி'யுடன் அவர் கூறிய வார்த்தைகள், அவருக்கும் ஆண்டவருக்கும் மட்டுமே கேட்கப்பட்ட முணுமுணுப்பாக அமைந்திருக்கவேண்டும்.
பரிசேயரும் வரிதண்டுபவரும் கோவிலில் நடந்துகொண்ட இக்காட்சியை நாம் கற்பனை செய்துபார்க்கும்போது, பரிசேயர் தன் வார்த்தைகளைப் 'பறைசாற்றினார்' என்றும், வரிதண்டுபவர் தன் வார்த்தைகளை 'முணுமுணுத்தார்' என்றும் புரிந்துகொள்ளலாம். இறைவனை நோக்கி எழும் செபங்கள் 'பறைசாற்றப்பட'வேண்டுமா? அல்லது மனதுக்குள் 'முணுமுணுக்கப்பட'வேண்டுமா? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.

பரிசேயரும், வரிதண்டுபவரும் பயன்படுத்திய வார்த்தைகளை ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்போது, இன்னும் சில பாடங்கள் புலனாகின்றன. இருவரும் "கடவுளே" என்ற வார்த்தையுடன் ஆரம்பித்திருப்பதால், இருவரின் கூற்றும் செபம் என்ற உணர்வை எழுப்புகிறது. அதுவும், கோவிலில் இவர்கள் இருவரும் இவ்விதம் ஆரம்பித்திருப்பதால் அவர்கள் சொன்னது செபம்தான் என்ற எண்ணம் வலுவடைகிறது.
இதைத் தொடர்ந்து, பரிசேயர் தன் அருமை பெருமைகளை இறைவனிடம் எடுத்துரைக்கிறார். பெருமை பாராட்டுதல் என்ற எண்ணம் விவிலியத்தில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது. 'பெருமைப் பாராட்டுதல்' என்ற எண்ணத்தைக் குறிக்கும் எபிரேயச் சொல்... Mahalal. கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இறைவனைப் புகழ அடிக்கடி பயன்படுத்தப்படும் Hallelujah என்ற வார்த்தை, இந்த வார்த்தையிலிருந்து உருவானது என்பது Alan Winkler என்ற விவிலிய ஆய்வாளரின் கருத்து. எந்த நோக்கத்திற்காகப் பெருமை பாராட்டுகிறோம் என்பதைப் பொருத்து, அது தகுதியான பெருமையா அல்லது தகுதியற்ற பெருமையா என்பதைத் தீர்மானிக்கலாம். பெருமை பாராட்டுவது இறைவனைக் குறித்து எனில், நமது பெருமை தகுதியுள்ள பெருமையாக இருக்கும்.
திருப்பாடல் 44: 8
எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம். என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்திவந்தோம்.

ஒருவரைக் குறித்து, அவரே பெருமைகொள்வதை விட, மற்றொருவர் அவரைப் புகழ்வதே சிறந்தது என்பதை நீதிமொழிகள் நூல் இவ்வாறு சொல்கிறது:
நீதிமொழிகள் 27: 2
உன்னை உன்னுடைய வாயல்ல: மற்றவர்களுடைய வாய் புகழட்டும்: உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்.

திருத்தூதர் பவுல் அடியார் தான் ஒரு பரிசேயர் என்பதில் பெருமை பாராட்டியவர். இறைவன் அருளால் தான் அரிய பல காட்சிகளைக் கண்டாலும், அவற்றால் தான் பெருமை அடைந்துவிடாமல் இருக்க தனக்கு ஒரு பெருங்குறை இருப்பதாக அவர் கொரிந்தியருக்கு எழுதிய 2ம் திருமுகத்தில் (2 கொரி. 12:1-12) விளக்கமாகக் கூறியுள்ளார். இயேசுவின் திருத்தூதராக மாறியபின், அவர் பெருமை பாராட்டுவதேல்லாம் சிலுவையில் மட்டுமே என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்:
கலாத்தியர் 6: 14
நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

இந்த விவிலியப் பின்னணியிலிருந்து பார்க்கும்போது, பரிசேயர் கோவிலில் சொன்ன சொற்கள் தகுதியற்ற பெருமை பாராட்டுதலாக அமைந்தது என்பதை உணரலாம். பரிசேயர் கடவுளிடம் தன்னைப்பற்றி சொல்லும் வார்த்தைகளில் பெரும்பாலானாவை உண்மைகளே! அவரது நோன்பு பற்றியும், கோவிலுக்கு அவர் தரும் காணிக்கை பற்றியும் அவர் சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால், தன்னைப்பற்றிப் பேசுவதற்கு முன், அவர் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டது, நம்மைச் சங்கடப்படுத்துகிறது. கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் என்று அவர் ஆரம்பித்த அந்தப் பட்டியலில், தன்னோடு கோவிலுக்குள் நுழைந்த வரிதண்டுபவரையும் பரிசேயர் சேர்த்தார்.

பொதுவாக, நம்மைப் பற்றி நாமே பேசும்போது, அதிலும், உள்ளது உள்ளபடியே நாம் பேசும்போது, அதில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், மற்றவர்களோடு நம்மை ஒப்பிடும்போது, அவர்களைப் பற்றிய தீர்ப்புக்களை நாம் எழுதிவிடுகிறோம். இயேசு கூறிய ஒரு முக்கியமான அறிவுரை, இங்கு அலட்சியப்படுத்தப்படுகிறது. இந்த அறிவுரையை மத்தேயு நற்செய்தி, 7ம் பிரிவில் மலைப்பொழிவாகவும், லூக்கா நற்செய்தி 6ம் பிரிவிலும் காண்கிறோம்.
மத்தேயு நற்செய்தி 7 1-5
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?அல்லது அவரிடம், 'உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.

பரிசேயர் இறைவனிடம் சொன்ன வார்த்தைகளில், தகுதியற்றத் தற்பெருமையும், அடுத்தவரைத் தீர்ப்பிட்ட அகந்தையும் ஒலித்தன. இத்தகைய மனநிலையைச் சுட்டிக்காட்டத்தான் இயேசு இந்த உவமையைச் சொன்னார். இந்த உவமையின் முன்னுரையாக நற்செய்தியாளர் லூக்கா கூறும் வார்த்தைகளின் முழுப் பொருளையும் இங்கு உணர்கிறோம்: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார். (லூக்கா 18: 9)

செபம் என்ற பெயரில், பரிசேயர் பறைசாற்றிய இந்த அகந்தை அறிக்கையின் எதிர் துருவமாக, வரிதண்டுபவர் உள்ளத்திலிருந்து ஓர் அற்புத செபம் விண்ணை நோக்கி எழுந்தது. வரிதண்டுபவர் இறைவனை நோக்கி எழுப்பிய அந்த செபத்தின் ஆழத்தை அடுத்தத் தேடலில் உணர முயல்வோம்.








All the contents on this site are copyrighted ©.