2014-04-08 15:24:52

நுண்கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுமாறு ஐ.நா. வலியுறுத்தல்


ஏப்.08,2014. “ஒரு சிறிய கடி பெரிய அச்சுறுத்தலைச் சுமக்கின்றது” என்று சொல்லி, கொசுக்கள் மற்றும் நச்சு ஈ வகைகள் கடிப்பதால் பரவும் நோய்களால் 21ம் நூற்றாண்டில் எவரும் இறக்காமல் இருப்பதற்கு அனைத்துலக சமுதாயம் முயற்சிக்குமாறு கேட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
ஏப்ரல் 7, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக நலவாழ்வு தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், கொசுக்கள், நச்சு ஈக்கள், மூட்டைப்பூச்சிகள் மற்றும் பிற நுண்கிருமிகளால் ஒவ்வோர் ஆண்டும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நுண்கிருமிகளால் ஏற்படும் மலேரியா, டெங்கு காய்ச்சல், மஞ்சள்காமாலை, ஜப்பானிய மூளைவீக்கம், Chagas நோய், இன்னும், நாள்பட்ட நோய்களுக்குக் காரணமாகும் leishmaniasis போன்றவற்றால் கோடிக்கணக்கான மக்கள் துன்புறுகின்றனர் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
இப்புவியின் தட்ப வெப்பநிலை மாற்றம், வாழ்வுமுறைகளில் மாற்றம், அனைத்துலக வணிகமும், பயணங்களும் அதிகரிப்பு ஆகியவை, அதிகமான மக்கள் நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்களால் தாக்கப்படுகின்றனர் என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
மேலும், கொசுக்கடியினால் பரவும் டெங்கு காய்ச்சல், தற்போது நூறு நாடுகளில் 250 கோடிக்கு மேற்பட்ட மக்களை, அதாவது உலகின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டுக்கு அதிகமானவர்களைத் தாக்கியுள்ளது என்று உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.