2014-04-08 15:24:00

தென் சீனக் கடல் பகுதி விவகாரம் அமெரிக்கத் தலையீட்டால் மோசமடைந்து வருகின்றது


ஏப்.08,2014. தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பின்சுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், அவ்விரு நாடுகளுக்கிடையே இடம்பெறும் நேர்மையான மற்றும் திறந்த மனம் கொண்ட உரையாடலால் மட்டுமே தீர்க்கப்பட முடியுமே தவிர, அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற வெளிநாட்டுச் சக்திகளின் நேரடி தலையீட்டால் அல்ல எனக் கூறியுள்ளார் பிலிப்பின்ஸ் ஆயர் ஒருவர்.
இவ்விவகாரத்தில் பிலிப்பின்சுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு ஆதரவளித்து வருவது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது என, மனிலா துணை ஆயர் Broderick Pabillo குறை கூறினார்.
இவ்விவகாரத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு தலையிடாமல் இருந்தால், நீண்டகால இப்பிரச்சனைக்கு நிச்சயமாகத் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்த ஆயர் Pabillo, தென் பசிபிக் பகுதியில், பிலிப்பின்சின் நட்பு நாடாக அமெரிக்கா கொண்டுள்ள ஈடுபாட்டை, ஓர் அச்சுறுத்தலாக நோக்கும் சீனா, பிலிப்பின்ஸ் மீது மேலும் கோபம் கொண்டுள்ளது என்று கூறினார்.
தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பின்சுக்கும், சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் நீண்ட காலப் பிரச்சனையாக, பன்னாட்டு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.