2014-04-08 15:23:31

திருத்தந்தை பிரான்சிஸ் : திருச்சிலுவை ஓர் அடையாளம் அல்ல, இது நம் பாவங்களைத் தம்மீது சுமந்த இறைவனின் பேருண்மை


ஏப்.08,2014. திருச்சிலுவை, ஓர் அலங்காரப் பொருள் அல்ல, இது நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அடையாளமும் அல்ல, மாறாக, இது நம் பாவங்களைத் தம்மீது சுமந்த, தம்மையே தாழ்த்திய இறைவனின் பேருண்மை என்றும், திருச்சிலுவையின்றி கிறிஸ்தவம் கிடையாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய் காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் நிகழ்த்திய மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவம், மெய்யியல் கோட்பாடு அல்ல, இது, உயிர் வாழ்வதற்கு அல்லது கல்விக்கு அல்லது அமைதியை ஏற்படுத்துவதற்கான திட்டம் அல்ல, மாறாக, கிறிஸ்தவம், சிலுவையில் உயர்த்தப்பட்ட, நம்மை மீட்பதற்காகத் தம்மையே நிர்மூலமாக்கிய ஒரு மனிதருடையது என்றும் கூறினார்.
பாலைநிலத்தில் இறைவன் மற்றும் மோசே பற்றிப் புகார் சொல்லும் யூத மக்களிடம் இறைவன் பேசியதை விவரிக்கும் எண்ணிக்கை நூல் பகுதியையும், இந்நாளைய நற்செய்தியில் இயேசு பரிசேயர்களை எச்சரித்த பகுதியையும் மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
சிலுவை மரணம்வரை தம்மையே தாழ்த்தி, பணியாளராக இருந்த இறைமகனின் ஆழமான தாழ்மையைப் புரிந்துகொள்ளாமல், கிறிஸ்தவத்தைப் புரிந்துகொள்ள இயலாது என்றும் கூறினார் திருத்தந்தை.
இறைவன் நமக்குக் கொடுக்கும் மன்னிப்பு, நாம் அவரோடு கொண்டுள்ள கடனை இரத்து செய்வது போன்றது அல்ல, மாறாக, இறைவன் நமக்குக் கொடுக்கும் மன்னிப்பு, சிலுவையில் இறந்த தமது மகனின் காயங்கள் ஆகும், அவர் நம் அனைவரையும் தம்பக்கம் ஈர்ப்பாராக, அவரால் நாம் குணப்படுத்தப்பட நம்மை நாம் அனுமதிப்போமாக என்று இச்செவ்வாய் காலை திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.