2014-04-08 15:25:01

குடியேற்றதாரத் தொழிலாளரின் உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தில் எல்லா நாடுகளும் கையழுத்திடுமாறு ஐ.நா. வலியுறுத்தல்


ஏப்.08,2014. உலகில் ஏறக்குறைய பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் அமலுக்கு வந்த குடியேற்றதாரத் தொழிலாளரின் உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தில் எல்லா நாடுகளும் கையழுத்திடுமாறு ஐ.நா. வல்லுனர்கள் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.
குடியேற்றதாரத் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகள் குறித்த ஐ.நா. வல்லுனர்கள் குழுவின் தலைவர் பிரான்சிஸ்கோ காரியோன் மேனா இவ்வழைப்பை முன்வைத்தார்.
இந்த அனைத்துலக ஒப்பந்தத்தில் நாற்பத்தேழு நாடுகள் கையழுத்திட்டிருந்தாலும், குடியேற்றதாரத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்ந்து இடம்பெறுவதாகவும், இத்தொழிலாளர்கள் தாங்கள் பணிசெய்கின்ற மற்றும் சொந்த நாடுகளுக்குச் செய்யும் உதவிகள் குறைத்து மதிப்பிடப்படுகின்றன எனவும் கவலை தெரிவித்துள்ளார் மேனா.
உலகில் இருபது கோடிக்கு மேற்பட்ட குடியேற்றதாரர் உள்ளனர் எனவும், இவர்களில் மூன்று கோடிப் பேர் சரியான ஆவணங்கள் இன்றி இருப்பவர்கள் எனவும், ஏறக்குறைய இரண்டு கோடியே பத்து இலட்சம் பேர் கட்டாயத் தொழிலில் சிக்கியுள்ளனர் எனவும் இக்குழு கணக்கிட்டுள்ளது.
குடியேற்றதாரத் தொழிலாளரின் உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தத்துக்கு ஐ.நா. பொது அவை 1990ம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்திருந்தாலும், அது அமலுக்கு வருவதற்கு 23 ஆண்டுகள் எடுத்தன என்றும் மேனா கூறினார்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.