2014-04-05 16:29:30

திருத்தந்தையின் ஏழ்மை பற்றிய கருத்துக்கள் சக்திமிக்கவை, லைபீரிய அரசுத்தலைவர்


ஏப்.05,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய தனது எண்ணங்களை வத்திக்கான் வானொலி நிருபர்களிடம் பகிர்ந்து கொண்ட லைபீரிய அரசுத்தலைவர் Ellen Johnson Sirleaf அவர்கள், ஏழ்மை பற்றிய திருத்தந்தையின் கருத்துக்கள் மிகவும் சக்தி படைத்தவை என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள் அனல்பறக்கவுள்ளன, அவரின் எடுத்துக்காட்டான செயல்கள் தூண்டுதலாக அமையவுள்ளன, ஏழ்மையை அகற்றுவதற்கு அவர் கூறிவருவது, ஐ.நா.வின் மில்லென்யத் திட்டங்களை ஒத்திருக்கின்றன, அவர் இந்தத் துறையில் கூறும் ஒவ்வொன்றும் தனக்குத் தூண்டுதலாக உள்ளன எனத் தெரிவித்தார் லைபீரிய அரசுத்தலைவர் Sirleaf.
ஆப்ரிக்காவின் முதல் பெண் அரசுத்தலைவரான Sirleaf அவர்கள், பெண்களின் பாதுகாப்புக்கும், அமைதியைக் கட்டியெழுப்பும் பணியில் பெண்கள் முழுமையாய்ப் பங்கேற்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமைகளுக்கும் வன்முறையற்ற வழிகளில் போராடியதற்காக, 2011ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ளார்.
ஐ.நா.வின் 2015ம் ஆண்டுக்குப் பின்னான வளர்ச்சித் திட்ட இலக்குகள் குறித்த உயர்மட்ட குழுவுக்கு அரசுத்தலைவர் Ellen Johnson Sirleaf அவர்களும் ஒரு தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
பல ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த லைபீரியாவில் உணவுப் பாதுகாப்பு 43 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும், நாட்டின் பல கிராமங்களில் காணப்படும் பசியை அகற்றுவதற்கு இன்னும் அதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார் அரசுத்தலைவர் Sirleaf.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.