2014-04-05 16:29:16

திருத்தந்தை பிரான்சிஸ், லைபீரிய அரசுத்தலைவர் சந்திப்பு


ஏப்.05,2014. ஆப்ரிக்கக் கண்டத்தின் முதல் பெண் அரசுத்தலைவர் Ellen Johnson Sirleaf அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லைபீரிய நாட்டு அரசுத்தலைவரான Sirleaf அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார்.
திருப்பீடத்துக்கும், லைபீரியாவுக்கும் இடையே நல்லுறவு அவசியம் என்பது வலியுறுத்துப்பட்டது என்றும், லைபீரியாவின் சனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் காணப்படுவது குறித்த திருப்தி தெரிவிக்கப்பட்டது என்றும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
லைபீரியாவின் அமைதிக்கும், தேசிய ஒப்புரவுக்கும் திருஅவை காட்டிய அர்ப்பணம், இன்னும், நாட்டின் நலவாழ்வு மற்றும் கல்விக்கு திருஅவை அளித்துவரும் முக்கிய பங்களிப்பு இச்சந்திப்புக்களில் பாராட்டப்பட்டது என்றும் அப்பத்திரிகை அலுவலகம் கூறியது.
அனைத்துலக மற்றும் நாடுகளின் தற்போதைய நிலை, குறிப்பாக தற்போதைய நெருக்கடி நிலை பற்றியும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.