2014-04-05 16:20:09

தவக்காலம் 5ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 குணமாக்க முடியாத ஒரு நோயுடன் பிறந்த ஜெரமியின் (Jeremy) உடலும் மனமும் வளர்ச்சியில் குன்றியிருந்தன. அவனது வாழ்நாட்கள் எண்ணப்பட்டிருந்தன. 12 வயதான ஜெரமி, 6 வயது குழந்தைகளுடன் படித்துவந்தான். வகுப்பு நடக்கும்போது, சில நேரங்களில் கத்துவான். அபூர்வமாக, ஒரு சில நேரங்களில் அவன் தெளிவாகப் பேசுவான். உடலின் பல செயல்பாடுகள் அவன் கட்டுப்பாட்டில் இல்லாததால், வகுப்பில் சங்கடமானச் சூழல்கள் எழுந்தன.
வகுப்பின் ஆசிரியர் டோரிஸ் (Doris) பொறுமை இழந்தார். ஜெரமியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, அவர்கள் மகனை ஒரு சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படி அவர் கூறியபோது, அவர்கள் இருவரும் கண்கலங்கி நின்றனர். அவர்கள் வாழ்ந்த பகுதியில் சிறப்புப் பள்ளிகள் ஏதும் இல்லை என்றும், ஜெரமிக்கு அந்தப் பள்ளி மிகவும் பழகிப் போய்விட்டதால், அவனை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது அவனை மிகவும் பாதிக்கும் என்றும் கூறி, ஆசிரியரிடம் விண்ணப்பித்தனர். அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்ட ஆசிரியர், அரைகுறை மனதோடு இணங்கினார்.
உயிப்புத் திருநாள் நெருங்கி வந்தது. ஆசிரியர் டோரிஸ் அவர்கள், இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை குழந்தைகளுக்கு விளக்கிக் கூறினார். பின்னர், வகுப்பில் இருந்த 19 குழந்தைகளிடமும் ஆளுக்கொரு பிளாஸ்டிக் முட்டையைக் கொடுத்தார். புது வாழ்வைக் குறிக்கும் ஏதாவது ஓர் அடையாளத்தை, அந்த முட்டையில் போட்டு கொண்டுவர வேண்டும் என்று கூறினார். குழந்தைகள் அனைவரும் மகிழ்வுடன் பிளாஸ்டிக் முட்டையைப் பெற்றுக்கொண்டனர். ஜெரமி, பிளாஸ்டிக் முட்டையை வாங்கியபோது ஒன்றும் பேசவில்லை. தான் சொன்னது அவனுக்கு விளங்கியிருக்குமா என்று ஆசிரியர் குழம்பி நின்றார்.
அடுத்தநாள் ஆசிரியர் வகுப்பிற்கு வந்ததும், அவரது மேசைமீது 19 முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் முதல் முட்டையை எடுத்துப் பார்த்தபோது, அதில் ஒரு சின்னப் பூ வைக்கப்பட்டிருந்தது. புது வாழ்வுக்கு, பூத்திருக்கும் மலர் ஓர் அழகிய அடையாளம் என்று கூறிய ஆசிரியர், அந்த முட்டையைக் கொண்டு வந்த சிறுமியைப் பாராட்டினார்.
அடுத்த முட்டைக்குள் ஒரு பிளாஸ்டிக் வண்ணத்துப் பூச்சி இருந்தது. கூட்டுப் புழுவிலிருந்து அழகாக வெளியேறும் வண்ணத்துப் பூச்சி புது வாழ்வுக்கு தகுந்த அடையாளம் என்று ஆசிரியர் அடுத்த சிறுமியைப் பாராட்டினார்.
மூன்றாவது முட்டையை எடுத்த ஆசிரியர், திகைத்து நின்றார். அந்த முட்டையில் எதுவும் இல்லை, காலியாக இருந்தது. அதைக் கொணர்ந்தது ஜெரமியாகத்தான் இருக்கவேண்டும் என்று ஆசிரியர் கணித்தார். தான் சொன்னதை ஜெரமி புரிந்துகொள்ளாததால் அவனைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணி, ஆசிரியர் டோரிஸ், அந்த முட்டையை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்ததை எடுக்கச் சென்றார்.
அப்போது, ஜெரமி கையை உயர்த்தி, "மிஸ், என்னுடைய முட்டையைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே!" என்று சொன்னான். "ஜெரமி, உன் முட்டையில் எதுவும் இல்லையே, என்ன சொல்வது?" என்று ஆசிரியர் கேட்டார்.
"மிஸ், இயேசுவின் கல்லறை காலியாகத்தானே இருந்தது" என்று சிறுவன் ஜெரமி சொன்னதும், ஆசிரியர் அதிர்ந்துபோனார். வகுப்பில் அமைதி நிலவியது. ஜெரமி தொடர்ந்து, "இயேசு கொல்லப்பட்டார். ஆனால், அவரது தந்தை அவரை உயிர்ப்பித்தார். எனவே, கல்லறை காலியானது" என்று தெளிவாகக் கூறினான். ஆசிரியர் டோரிஸின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
மூன்று மாதங்கள் சென்று, சிறுவன் ஜெரமி இறைவனடி சேர்ந்தான். அவனை வைத்திருந்த அந்தப் பெட்டிக்கு மேல், 19 முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும், ஒன்றுமில்லாமல் காலியாக இருந்தன.

உயிர்ப்புத் திருநாளை நெருங்கி வந்துள்ளோம். இவ்வேளையில், கல்லறை காலியாகும், நமது வாழ்வு தொடரும் என்பதை நமக்கு நினைவுபடுத்தும் ஒரு நற்செய்தியை இன்று நாம் கேட்கிறோம். இயேசு இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமையை இன்று நற்செய்தியாக வாசிக்கிறோம் (யோவான் நற்செய்தி 11: 1-45). இந்நிகழ்ச்சி வழியாக, ஒரு இறையியல் பாடம் நமக்கு வழங்கப்படுகிறது.

இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை, இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுகிறது. இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்துவிடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப்போக, அழிந்துபோக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்த நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். தாமதமாக வந்த இயேசுவைக் கண்டு மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும் ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் சொல்கின்றனர்.

வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில் நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.

யோவான் நற்செய்தி 11: 21-22
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்றார். மார்த்தாவின் இந்த நம்பிக்கை அவருக்குப் பின் வந்த பலருக்கு வழி காட்டியது.

இயேசு இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய இந்தப் புதுமை ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த ஆதி கிறிஸ்தவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது என்று விவிலிய ஆய்வாளர்களும், திருஅவை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். ஆதி கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம் உயிருடன் இருப்போமா என்ற கேள்வி, இவர்கள் கழுத்தைச் சுற்றிக்கொண்ட ஒரு கருநாகத்தைப் போல் எப்போதும் இவர்களை நெருக்கிக் கொண்டே இருந்தது. இறந்து, புதையுண்ட தங்களையும், தங்கள் திருஅவையையும், இறைவன், உயிருடன் வெளியே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையை வளர்க்க, இயேசு, இலாசரை உயிருடன் கொணர்ந்த புதுமை உதவியது.

இதே எண்ணங்களை இன்றைய முதல் வாசகமும் நமக்குச் சொல்கிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தில் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று எசேக்கியேல் இறைவாக்கினர் கூறுகிறார். எலும்புக்கூடுகள் பரவிக்கிடந்த ஒரு நிலத்தில் இறைவனின் ஆவி வீசியபோது, அந்த எலும்புக்கூடுகள் படிப்படியாக தசையும், தோலும் பெற்று உயிருள்ள மனிதர்களாய், ஒரு பெரும் படையாய் எழுந்த அற்புத காட்சியை 37ம் பிரிவில், முதல் 11 திருவசனங்களில் விவரிக்கும் இறைவாக்கினர், அதைத் தொடர்ந்து இன்றைய வாசகத்தில் நாம் கேட்கும் ஆறுதலும், நம்பிக்கையும் தரும் இந்த வார்த்தைகளைக் கூறுகிறார்.

இறைவாக்கினர் எசேக்கியேல் 37 12-14
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, எதுவாக இருந்தாலும், கடவுள் கைபட்டால் புதுமைகளாய் மாறும். ஆனால், இப்புதுமையை நிகழ்த்த, கடவுள் நம் ஒத்துழைப்பை விரும்புகிறார். இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கை வரிகளில் இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகள் இடுகிறார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.

"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ." என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன் நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். இயேசு தன் வல்லமையால் கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றிருந்தவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது நமக்கு.

இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் அதுதான் வேறுபாடு. தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்க, இயேசு புதுமைகள் செய்யவில்லை. புதுமைகளின் வழியே மக்களின் வாழ்வில் மாற்றங்கள் உண்டாக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள் நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அஙகு வந்தவர்கள். இயேசு அவர்களது அவநம்பிக்கையை உடைக்க விரும்பினார். நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் வருடங்கள் ஆனாலும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

கல்லறையை மூடியிருந்த கல்லை நகர்த்துவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்ற பிரச்சனை. மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ் காலத்திற்கு, எதிர் காலத்திற்கு அழைத்தார். இறந்த காலம் அழிந்து, அழுகி நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.

இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா." இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர் இயேசுவின் குரல்கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும் கடவுளின் குரல் கேட்டால் மீண்டும் உயிர் பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக்கொள்ளும் பலரை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம். அல்லது, நம்மை நாமே இவ்விதம் புதைத்துக் கொண்ட நேரங்களை நினைத்துப் பார்ப்போம்.

புகழ்பெற்ற உரோமையக் கவிஞர் Virgil, ஓர் அரசனைப் பற்றிக் கூறும் கதை (வரலாறு?) இது. கொஞ்சம் அருவருப்பூட்டும் கதை என்றாலும், சொல்லியாக வேண்டும். ஏனெனில் இங்கு ஒரு நல்ல பாடம் நமக்குக் காத்திருக்கிறது. இந்த அரசர் பல பயங்கரமான சித்திரவதைகளைக் கண்டுபிடித்தவர். அந்தச் சித்ரவதைகளில் ஒன்று இது: மரண தண்டனை பெற்ற குற்றவாளியை ஒரு பிணத்தோடு கட்டி விடுவார்கள். அதுவும் முகத்துக்கு நேர் முகம் வைத்து, குற்றவாளியையும், பிணத்தையும் கட்டி, ஓர் இருண்ட குகையில் தள்ளிவிடுவார்கள். குற்றவாளி அந்த பிணத்தோடு தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். இதற்கு மேல் இத்தண்டனையை நான் விவரிக்க விரும்பவில்லை.
அதிர்ச்சியூட்டும், அருவருப்பூட்டும் இச்சித்ரவதையை நம்மில் பலர் நமக்கே கொடுத்துக் கொள்கிறோம்.. இறந்த காலம், பழைய காயங்கள் என்ற பிணங்களைச் சுமந்து வாழும் எத்தனை பேரை நாம் அறிவோம். அல்லது, எத்தனை முறை இது போல் பிணங்களுடன், இருளில் நாம் வாழ்ந்திருக்கிறோம். நாமாகவே நமக்கு விதித்துக்கொண்ட இந்தச் சித்திரவதைகளிலிருந்து, இந்த இருளான கல்லறைகளிலிருந்து "வெளியே வாருங்கள்" என்று இயேசு இன்றைய நற்செய்தி வழியாக நம்மை அழைக்கிறார்.

வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்." உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக் கொள்ளமுடியாது. அந்த நல்ல காரியத்தை, அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடைப் பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அந்நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார்.

இறந்தகாலக் காயங்களைச் சுமந்து இறந்து கொண்டிருக்கும் நம்மை, கல்லறைகளிலிருந்து இறைவன் வெளிக் கொணரவேண்டும் என்று மன்றாடுவோம். கல்லறைகளை விட்டு வெளியேறும் பலரது கட்டுகளை அவிழ்த்து, அவர்களை விடுவிக்கும் பணியில் இன்னும் ஆர்வமாய் ஈடுபடவும் இறையருளை இறைஞ்சுவோம்.








All the contents on this site are copyrighted ©.