2014-04-04 15:59:17

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்கள் எக்காலத்தையும்விட இக்காலத்தில், அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்


ஏப்.04,2014. நற்செய்தியை அறிவித்த இறைவாக்கினர்கள், எப்பொழுதும், திருஅவையிலும்கூட துன்புறுத்தப்பட்டு வந்தனர், தொடக்க காலங்களைவிட இக்காலத்தில் அதிகமான மறைசாட்சிகள் இருக்கக்கூடும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், "நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்..." என்றுரைக்கும் சாலமோனின் ஞானம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதியை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் நற்செய்தியை அறிவிக்கும்போது துன்பங்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாதது எனவும், புரிந்துகொள்ளாமை மற்றும் அடக்குமுறைகளுக்கு விசுவாசிகள் பயப்பட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மீட்பு வரலாறு முழுவதும் குறித்த சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர்கள் அனுபவித்த பல துன்பங்களை இயேசுவே பரிசேயர்களிடம் நினைவுபடுத்தினார் என்றும், மீட்பு வரலாற்றில், இஸ்ரேல் வரலாற்றில், திருஅவையிலும்கூட இறைவாக்கினர்கள் துன்புறுத்தப்பட்டனர் என்றும் கூறினார்.
இறைமக்களுக்கு உண்மையை அறிவிப்பதற்குத் தூய ஆவியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் அடக்குமுறைகளை எதிர்நோக்கினர், இதற்கு இயேசுவே எடுத்துக்காட்டாய் இருக்கிறார், இயேசு தம் மக்களின் அனைத்துத் துன்பங்களையும் தம்மீது சுமந்துகொண்டார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகப்போக்கு மிகுந்துள்ள ஒரு சமுதாயத்தில் உண்மையைச் சொல்லி கிறிஸ்து இயேசுவை அறிவிப்பதற்காக இக்காலத்தில் அதிகமான கிறிஸ்தவர்கள் மறைசாட்சிகளாகின்றனர் என்றும், வீட்டில் நற்செய்தியை வைத்திருப்பதற்கும், மறைக்கல்வியைப் போதிப்பதற்கும், சேர்ந்து செபிப்பதற்கும்கூட உலகின் சில பகுதிகளில் மரணதண்டனை விதிக்கப்படுகின்றனர் அல்லது கைது செய்யப்படுகின்றனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.