2014-04-04 15:59:52

கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பற்றிப் பேசுவது நிறுத்தப்பட வேண்டும், புனிதபூமி கத்தோலிக்கத் தலைவர்கள்


ஏப்.04,2014. புனித பூமியில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களால், கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மிதவாத முஸ்லிம்களும் கடுமையாய்ப் பாதிக்கப்படுகின்றனர் என்று, புனிதபூமி கத்தோலிக்கத் தலைவர்கள் கூறினர்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் என்று செய்திகள் வெளியாகும்போது பொதுவாக கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் துன்பங்கள் மட்டுமே பேசப்படுகின்றன, உண்மையில், முஸ்லிம் தீவிரவாதிகளால் நடத்தப்படும் இந்த அடக்குமுறைகளில், பிரிவினைக்குழுவினர் அல்லது ஒத்துப்போகாதவர்கள் என்று பழிசுமத்தப்பட்டு முஸ்லிம்களும் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர் அத்தலைவர்கள்.
புனிதபூமி கத்தோலிக்கத் தலைவர்கள் நடத்திய கூட்டத்திற்குப் பின்னர், அவர்களது இணையதளத்தில் இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட அவர்களின் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சுன்னி இஸ்லாம் பிரிவினர் அதிகமாக வாழும் பகுதிகளில், Shiite இஸ்லாம் பிரிவினர் தாக்கப்பட்டு கொலைசெய்யப்படுகின்றனர், அதேபோல் Shiite இஸ்லாம் பிரிவினர் அதிகமாக வாழும் பகுதிகளில், சுன்னி இஸ்லாம் பிரிவினர் தாக்கப்பட்டு கொலைசெய்யப்படுகின்றனர் என்றும் கூறியுள்ள ஆயர்கள், கிறிஸ்தவர்கள் மாறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதற்காக, அவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம் தீவிரவாதிகள், முற்சார்பு எண்ணங்களை விதைத்து, மக்களையும், மதங்களையும் ஒருவர் மற்றவருக்கு எதிராகச் செயல்படத் தூண்டுகின்றனர் எனவும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.