2014-04-03 17:29:17

திருத்தந்தை பிரான்சிஸ் - மன்னிப்பு ஒன்றே ருவாண்டா நாட்டின் முக்கிய எண்ணமாக இருக்கவேண்டும்


ஏப்.03,2014. 20 ஆண்டுகளுக்கு முன் ருவாண்டா நாட்டை வேதனையில் ஆழ்த்திய இனப் படுகொலைகளுக்குப் பின், அந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது திருஅவையின் தலையாயப் பணியாக அமைந்து வந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஒவ்வொரு நாட்டின் ஆயர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தந்தையுடன் மேற்கொள்ளும் 'அத் லிமினா' சந்திப்பிற்காக உரோம் நகர் வந்துள்ள ருவாண்டா ஆயர்களை, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இனக்கலவரங்களின் இருபதாம் ஆண்டை நெருங்கும் வேளையில், மன்னிப்பு ஒன்றே அந்நாட்டின் முக்கிய எண்ணமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அரசும் திருஅவையும் வளர்க்கவேண்டிய நம்பிக்கையும், ஒத்துழைப்பும் ருவாண்டா நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு மிகவும் அவசியம் என்பதை திருத்தந்தை ஆயர்களுக்கு வழங்கிய உரையில் வலியுறுத்தினார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் பல்வேறு துறவறச் சபைகள் காட்டிவரும் அர்ப்பண உணர்வைப் பாராட்டியத் திருத்தந்தை, உடலாலும் மனதாலும் வேதனையுறும் மக்கள் திருஅவைப் பணிகளின் விருப்பத் தேர்வு மக்களாக அமையவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
பணிகளுக்குத் தங்களையே அர்ப்பணிக்கும் துறவறக் குழுமங்களைப் போலவே, திருஅவையின் பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு நாளும் செபத்திலும் நற்கருணை ஆராதனையிலும் தங்கள் முழு நேரத்தைச் செலவிடும் துறவறத்தாரையும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை.
துறவறத்தாரைப் போலவே, சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இல்லறத்தாரும், குறிப்பாக, மறைகல்வி ஆசிரியர்களான பொதுநிலைப் பணியாளர்களும் ஆற்றும் சேவைகளை, தன் உரையில் பாராட்டினார் திருத்தந்தை.
ருவாண்டா நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் இளையோருக்கு, தகுந்த கல்வி வழங்குவதுடன், அவர்களுக்கு நன்னெறி விழுமியங்களையும், விவிலிய வழிகளையும் சொல்லித் தருவது திருஅவையின் முக்கியப் பணி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.
ருவாண்டா நாட்டிற்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே தூதரகப் பரிமாற்றம் உருவான 50ம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று நடைபெறுவதை மகிழ்வுடன் நினைவுகூர்ந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.