2014-04-03 17:25:26

இங்கிலாந்து அரசி எலிசபெத், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு


ஏப்.03,2014. ஏப்ரல் 3, இவ்வியாழன் பிற்பகல் 3.30 மணிக்கு, இங்கிலாந்து அரசி எலிசபெத் அவர்களும், அவரது கணவரும், Edinburgh பிரபுவுமான பிலிப் அவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தனர்.
இத்தாலிய அரசுத் தலைவர், ஜார்ஜியோ நப்போலித்தானோ அவர்களின் அழைப்பை ஏற்று, இத்தாலியில் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அரசியும், அவரது கணவரும் மரியாதையின் நிமித்தம் திருத்தந்தையுடன் இச்சந்திப்பை மேற்கொண்டனர்.
இங்கிலாந்து அரசி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை எனினும், இதற்கு முன்னர், இங்கிலாந்து அரசி வத்திக்கானுக்கு மும்முறை வருகை தந்து, திருத்தந்தையர்களைச் சந்தித்துள்ளார்.
1961ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்களைச் சந்தித்ததே, இங்கிலாந்து அரசி வத்திக்கானுக்கு மேற்கொண்ட முதல் பயணமாக அமைந்தது. பின்னர், 1980ம் ஆண்டிலும், 2000மாம் ஆண்டிலும் அக்டோபர் 17ம் தேதி, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களை வத்திக்கானில் இருமுறை சந்தித்தார் இங்கிலாந்து அரசி.
2010ம் ஆண்டு, செப்டம்பர் 16ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இங்கிலாந்தில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட வேளையில், அவர், இங்கிலாந்து அரசியை அவரது அரண்மனையில் சந்தித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி தன் தலைமைப் பணியை ஏற்றபோது, பிரித்தானிய அரசின் சார்பில், Glouchester பிரபு, இளவரசர் ரிச்சர்ட் அலெக்சாண்டர் அவர்கள், இத்திருப்பலியில் கலந்துகொண்டார்.
1926ம் ஆண்டு பிறந்த எலிசபெத் அவர்கள், அவரது தந்தை, மன்னர் 6ம் ஜார்ஜ் அவர்கள், 1951ம் ஆண்டு மறைந்ததையடுத்து, தன் 26வது வயதில், இங்கிலாந்து அரசியாக முடிசூட்டப்பட்டார்.
இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்களில், 1837ம் ஆண்டு முதல், 1901ம் ஆண்டு முடிய அரசியாக இருந்த விக்டோரியா அரசி, ஏறத்தாழ 64 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார். அதற்கு அடுத்தபடியாக, தற்போதைய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்கள், அரசியாக, தன் 63வது ஆண்டைத் துவக்கியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.