2014-04-02 15:49:39

திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள அகில உலகக் கருத்தரங்கில், Autism மையப்பொருளாக அமையும் - பேராயர் Zimowski


ஏப்.2,2014. நலப்பணியாளர்களை வழிநடத்தும் திருப்பீட அவை ஏற்பாடு செய்துள்ள 29வது அகில உலகக் கருத்தரங்கில், Autism அதாவது, ‘மனவளர்ச்சியில் மாற்றுத்திறன், பலமுகம் கொண்ட குறைபாடு’ என்பது மையப்பொருளாக அமையும் என்று இவ்வவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள் தெரிவித்தார்.
ஏப்ரல் 2ம் தேதி, கடைபிடிக்கப்படும் அகில உலக Autism விழிப்புணர்வு நாளையொட்டி செய்தியொன்றை வெளியிட்டுள்ள பேராயர் Zimowski அவர்கள், நவம்பர் 20 முதல் 22 முடிய உரோம் நகரில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் Autism என்ற மாற்றுத்திறன் உடையோரை மனித சமுதாயத்தில் முழுமையாக இணைக்கும் வழிகள் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
இந்தக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயம் முழுவதும் இவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதன் வழியாகவே இப்பிரச்சனையைத் தீர்க்கமுடியும் என்றுரைத்தார் பேராயர் Zimowski.
மாற்றுத்திறன் கொண்ட இவர்களைக் குறித்த விவரங்கள் தெளிவாக்கப்படுதல், அவ்விவரங்களை ஒளிவுமறைவின்றி பிறரோடு பகிர்ந்துகொள்ளுதல், மாற்றுத் திறனாளிகளையும் அவர்களுக்குப் பணியாற்றுவோரையும் தகுந்த முறையில் வழிநடத்துதல் ஆகியவை நாம் சந்திக்கும் சவால்கள் என்று பேராயர் Zimowski அவர்கள் இச்செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.