2014-04-02 15:55:01

ஜப்பானின் புகுஷிமா அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் மீண்டும் குடியேற ஜப்பான் அரசு அனுமதி


ஏப்.2,2014. தென் அமெரிக்காவின் சிலி நாட்டின் வடமேற்குப் பகுதியில் நிலத்தடி சுரங்கங்கள் அதிகம் உள்ள Iquique பகுதியில் இச்செவ்வாய் நள்ளிரவையொட்டி ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி ஒன்றும் உருவானது.
இதுவரை இந்நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இன்னும் பல்லாயிரம் பேர் வேற்று இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் BBC செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, ஜப்பானின் புகுஷிமா அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் மீண்டும் குடியேறலாம் என்ற உத்தரவை ஜப்பான் அரசு விடுத்துள்ளது.
ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, ஜப்பானைத் தாக்கிய சுனாமியின் விளைவால் புகுஷிமா அணு உலை பழுதானதைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுற்றி வாழ்ந்த 4,70,000 மக்கள் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
அணு உலையைச் சுற்றி, ஆபத்துப் பகுதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலத்தில் தற்போது கதிர் வீச்சு அளவு குறைந்திருப்பதால், மக்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், அப்பகுதியில் வாழ மக்கள், குறிப்பாக, இளையோர் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.
2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான சுனாமியால், 15,884 பேர் கொல்லப்பட்டனர் என்றும், மற்றும் 2,636 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் : BBC / AsiaNews








All the contents on this site are copyrighted ©.