2014-04-02 13:22:31

அமைதி ஆர்வலர்கள் – 1913ல் நொபெல் அமைதி விருது(Henri La Fontaine)


ஏப்.02,2014. 1913ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Henri Marie La Fontaine, பெல்ஜிய நாட்டின் தலைநகர் பிரசல்லஸில்(Brussels) 1854ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தார். பன்னாட்டுச் சட்டப் பேராசிரியரான இவர், பெல்ஜிய சட்ட சபையில் 36 ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றியவர். புகழ்பெற்ற வழக்கறிஞர், புத்தக விளக்க அட்டவணையாளர், கலாச்சாரத்துறையில் பெருமளவில் சாதனைகள் புரிந்தவர், அனைத்துக்கும் மேலாக, அனைத்துலக விவகாரங்களில் உறுதியுடனும், முழுமையாகவும் தன்னை அர்ப்பணித்திருந்தவர். பிரசல்லஸ் Free பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்ற பின்னர், 1877ம் ஆண்டில் தனது 23வது வயதில் பிரசல்லஸ் மேல்முறையீடு நீதிமன்றத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார் Henri La Fontaine. இதே பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியில் பின்னர் முனைவர் பட்டமும் பெற்றார் இவர். வழக்கறிஞராகப் பயிற்சி செய்த இவர், அடுத்த 16 ஆண்டுகளுக்கு, பெல்ஜியத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். பொதுப்பணி ஒப்பந்தக்காரர்களின் உரிமைகளும் கடமைகளும் என்பது குறித்த நூலை 1885ம் ஆண்டில் வெளியிட்டார். மோசடிக்காரர்கள் குறித்த மற்றுமொரு நூலை 1888ம் ஆண்டில் வெளியிட்ட La Fontaine, பின்னர் அமைதிக்கானப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
La Fontaineக்கு சீர்திருத்தப் பணிகளில் ஏற்பட்ட ஆர்வம் இவரை மெது மெதுவாக அரசியலில் ஈடுபடுத்தியது. பொதுவுடமைவாதியான La Fontaine, அவ்வியக்கத்துக்காக எழுதினார், கூட்டங்களில் பேசினார், La Justice அதாவது நீதி என்ற பெயரில் பொதுவுடமை தினத்தாள் ஒன்று ஆரம்பிக்கப்படவும் ஒத்துழைத்தார். பொதுவுடமைவாதியாக, பெல்ஜிய செனட் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1907ம் ஆண்டு முதல் 1919ம் ஆண்டுவரை 13 ஆண்டுகள் செனட் அவைக்குச் செயலராகப் பணிசெய்தார். அதற்கு உதவித் தலைவராக 14 ஆண்டுகளும், பின்னர் 3வது உதவித் தலைவர்(1919-1932), 2வது உதவித் தலைவர்(1921-1922), முதல் உதவித் தலைவர்(1923-1932) எனவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். செனட் அவையில் இவர் பணி செய்த காலங்களில், கல்வி, தொழில், வெளிநாட்டு விவகாரங்கள் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டினார். La Fontaine, அமைச்சரவையில் சேர்ந்த தொடக்கக் காலங்களில் ஆரம்பக் கல்வியைச் சீர்படுத்துவதில் அக்கறை காட்டினார். கடைசிக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் வரவுசெலவுகள் குறித்து கவனம் செலுத்தினார். தொழில் சட்டம் சார்ந்த விடயத்தில், கனிமவளச் சுரங்கங்களை மேற்பார்வையிடும் மசோதாவை 1897ம் ஆண்டில் சமர்ப்பித்தார். ஒரு நாளைக்கு எட்டுமணி நேர வேலை மற்றும் ஒரு வாரத்தில் 44 மணி நேர வேலை என்ற மசோதாவுக்கு 1926ம் ஆண்டில் ஆதரவு தெரிவித்தார். வெளிநாட்டு விவகார வரவுசெலவுத் திட்டம் பற்றி ஏறத்தாழ ஒவ்வோர் ஆண்டும் இவர் பேசத் தவறுவதில்லை.
1901ம் ஆண்டில் Boer சண்டையில் ஈடுபட்டிருந்த போராளிகளுக்கு இடையே நடுநிலை வகித்து சண்டையை முடிவுக்குக் கொண்டு வருமாறு பெல்ஜிய அரசை வற்புறுத்தி வந்தார் La Fontaine. 1911ம் ஆண்டில் இத்தாலியோடு உடன்பாடு ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் மசோதா ஒன்றை வலுக்கட்டாயமாக இவர் தாக்கல் செய்தார். நாடுகளின் கூட்டமைப்புக்கும், லக்சம்பர்க்குடன் பொருளாதார ஒன்றியம் ஏற்படவும், Locarno ஒப்பந்தங்கள், Kellogg-Briand ஒப்பந்தம், ஆயுதக்களைவு, பன்னாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குச் சட்ட வரைவுகள் என, பலவற்றுக்கு இவர் தனது சட்ட முறைப்படியான ஆதரவை வழங்கினார். 1919ம் ஆண்டில் பாரிசில் நடந்த அமைதிக் கருத்தரங்குக்கும், 1920ம் ஆண்டு முதல் 1921ம் ஆண்டுவரை நடந்த நாடுகளின் கூட்டமைப்பின் முதல் அவைக்கும் பெல்ஜியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் La Fontaine. அச்சமயங்களில் அனைத்து நாட்டுப் பொதுவுடமைக்கு உறுதியான ஆதரவாளராய் இருந்தார். எடுத்துக்காட்டாக, கடும் சண்டைகளை நிறுத்துவதற்கு, சண்டையிடும் நாட்டுக்கு எதிராக, இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிப்பது, தேவைப்படின் இராணுவத்தைப் பயன்படுத்துவது எனப் பேசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர், இவ்வாறு தடை விதிப்பதன்மூலம் அந்நாடு அதிகமாகத் துன்புறும் என்பதை எடுத்துச் சொன்னார். பல்கலைக்கழகம், பாராளுமன்றம், நீதிமன்றம், வங்கி, வணிகம், குடியேற்றம், புள்ளிவிபரத் தகவல்கள், தொழில் போன்றவற்றுக்கு அனைத்துலக அளவில் நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்று இவர் வலியுறுத்தினார்.
பிரித்தானிய போரொழிப்புக் கோட்பாட்டாளர் Hodgson Pratt என்பவர், அனைத்து நாட்டு நடுநிலைமை மற்றும் அமைதி கழகத்தின் கிளை ஒன்றை ஆரம்பிக்க 1880களின் தொடக்க காலத்தில் பெல்ஜியத்துக்கு வந்தார். La Fontaine இவ்வியக்கத்தில் சேர்ந்து அமைதி இயக்கத்தை உருவாக்கினார். இவர், 1889ம் ஆண்டில் இதன் செயலரானார். அதுமுதல் நடந்த அனைத்து அமைதி மாநாடுகளிலும் இவர் கலந்து கொண்டார். இவ்வாறு 25 ஆண்டுகள் இதில் கலந்துகொண்டு அமைதிக்காக உழைத்தார். 1908ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Fredrik Bajerக்குப் பின்னர், 1907ம் ஆண்டில் அனைத்துலக அமைதி கழகத்தின் தலைவரானார் La Fontaine. 1943ம் ஆண்டு மே 14ம் தேதி இவர் இறக்கும்வரை இப்பதவியில் இருந்தார். 1894க்கும் 1915க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகளில் இவர் இலக்கியத்துக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரிது. முதல் உலகப் போருக்கு முன்னர் புத்தக விளக்க அட்டவணை திட்டத்தை, குறிப்பாக, சமூக அறிவியல் மற்றும் அமைதிக்கு உதவும் குறிப்புக்களைத் தொடங்கினார் La Fontaine. இதுவே இன்றும் பிரசல்லசில் செயல்படும் அனைத்துலக ஒன்றியக் கழகங்கள் உருவாகக் காரணமானது. இக்கழகம், 1951ம் ஆண்டில் ஐ.நா.வின் மற்றும் 1952ம் ஆண்டின் யுனெஸ்கோவின் பொருளாதார மற்றும் சமூக அவைக்கு ஆலோசனை வழங்கும் தகுதியைப் பெற்றிருந்தது.
இவ்வாறு பல நற்பணிகளைச் செய்திருப்பவர் La Fontaine. இவரது திறமைகளும் இவர் கொண்டிருந்த சக்தியும் பல சாதனைகளைத் துணிச்சலுடன் செய்ய உதவின. மலையேறுவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் அது குறித்த நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். கண்ணுக்குக் கண் என்ற செயல் இந்த முழு உலகையும் பார்வையற்றதாக்கிவிடும் என்று அமைதி பற்றி மகாத்மா காந்தி சொன்னது போல, மன அமைதிக்கும், உலக அமைதிக்கும் கேடாய் இருப்பவற்றை தவிர்த்து நடப்போம். பிறரின் நடத்தைகள் உனது மன அமைதியை குலைத்து விடாதபடிப் பார்த்துக் கொள்(தலாய்லாமா).







All the contents on this site are copyrighted ©.