2014-04-02 15:53:40

அமெரிக்க ஐக்கிய நாட்டையும், மெக்சிகோ நாட்டையும் பிரிக்கும் சுவர் அருகே அமெரிக்க ஆயர்கள் ஆற்றியத் திருப்பலி


ஏப்.2,2014. நம்மிடையே உள்ள நலிந்த மக்களை நாம் எவ்விதம் மதிப்புடன் நடத்துகிறோம் என்பதைக் கொண்டே நாம் தீர்ப்பிடப்படுகிறோம் என்று அமெரிக்காவின் பாஸ்டன் பேராயர் கர்தினால் Séan O'Malley அவர்கள் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டையும், மெக்சிகோ நாட்டையும் பிரிக்கும் சுவர் அருகே, ஏப்ரல் 1, இச்செவ்வாயன்று அமெரிக்க ஆயர்கள் பலர் ஆற்றியத் திருப்பலியைத் தலைமையேற்று நடத்திய கர்தினால் O'Malley அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள லாம்பதூசா தீவுக்குச் சென்று, அப்பகுதியில் உயிரிழந்த பலரின் நினைவாக அக்கடலில் மலர் வளையம் ஒன்றை மிதக்கவிட்டதைப் போல, அமெரிக்க ஆயர்களும், இந்தப் பிரிவுச் சுவரின் அருகில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்விரு நாடுகளையும் பிரிக்கும் இந்தச் சுவரையொட்டி, பல்லாயிரம் மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்று கூறிய கர்தினால் O'Malley அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 400 பேரின் இறந்த உடல்கள் இச்சுவரின் அருகில் கண்டெடுக்கப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
குடிபெயர்ந்தோர் குறித்த சட்டங்களில் முழுமையான மாற்றங்களைக் கொணரவில்லையெனில், அமெரிக்க ஐக்கிய நாட்டு வரலாறு கறைபட்டதாகவே இருக்கும் என்று Seattle துணை ஆயர் Eusebio Elizondo Almaguer அவர்கள் கூறினார்.
இந்தப் பிரிவுச் சுவரின் இருபுறமும் கூடியிருந்த அமெரிக்க மக்களும் மெக்சிகோ மக்களும் ஆயர்கள் கூடி நிறைவேற்றிய இத்திருப்பலியில் பங்கேற்றனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.