2014-04-01 16:18:26

திருத்தந்தை பிரான்சிஸ் : மந்தநிலையும் வெளிவேடமும் பல கிறிஸ்தவர்களின் நோய்


ஏப்.01,2014. சீடத்துவ வாழ்வுக்கு உண்மையிலேயே தங்களை அர்ப்பணிக்கவும், நற்செய்திக்காக இடர்களைச் சந்திக்கவும் கிறிஸ்தவர்கள் தயாராக இருக்கவேண்டுமென்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இந்நாளைய திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவால் குணப்படுத்தப்பட்ட, பெத்சதா குளத்தருகில் 38 ஆண்டுகளாக உடல்நலமற்றிருந்த மனிதரின் ஆன்மீக நோயையும், இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதால் அவரைத் துன்புறுத்துவதற்காக, அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிய பரிசேயர்கள் பற்றியும் விளக்கினார்.
ஆர்வமின்றி வாழும் பல கத்தோலிக்கர் பற்றியும், தனது நலத்தைப் பற்றி மட்டும் அக்கறை கொண்டு அடுத்தவரின் தேவையை உணராத பிறரன்பு இல்லாத கத்தோலிக்கர் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தப் போக்கு மந்தநிலை நோயாகும், இது கிறிஸ்தவர்களின் கவனமின்மையால் வருவதாகும் என்றுரைத்தார்.
இந்தப் போக்கு அப்போஸ்தலிக்க ஆர்வத்தை முடக்கிவிடும், வெளியே சென்று நற்செய்தியை அறிவிப்பதற்கு அக்கறையின்மையை ஏற்படுத்தும், இவ்வாறு இருக்கும் கிறிஸ்தவர்கள் மயக்கநிலையில் இருப்பவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
வெளிவேடக் கிறிஸ்தவர்கள் பற்றியும் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, விதிமுறைகளே இவர்களுக்கு முக்கியம், ஓய்வு நாள்களில் இறையருள் வேலை செய்யக் கூடாது எனச் சொல்பவர்கள் இறையருளுக்குத் தங்கள் கதவுகளை மூடி வைத்திருப்பவர்கள், இப்படி இருப்பவர்கள் திருஅவையிலும் பலர் உள்ளனர் என்றும் கூறினார்.
நீ குணமாக விரும்புகிறாயா, இதைவிட கேடான எதுவும் செய்யாதே என்று இயேசு, அந்த நோயாளியிடம் கனிவுடனும் அன்புடனும் கூறினார், இதுவே கிறிஸ்தவ வழி, இதுவே அப்போஸ்தலிக்க ஆர்வம் எனவும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.