2014-04-01 16:19:53

தட்பவெப்பநிலை மாற்றம் இப்புவி முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஐநா எச்சரிக்கை


ஏப்.01,2014. புவியில் ஏற்பட்டுவரும் தட்பவெப்பநிலை மாற்றங்களின் தாக்கங்கள், அனைத்துக் கண்டங்கள் மற்றும் அனைத்துப் பெருங்கடல்களில் ஏற்கனவே உணரப்பட்டு வருவதால், இம்மாற்றங்களைத் தடுப்பதற்குப் பெரிய அளவில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
“தட்பவெப்பநிலை மாற்றம் 2014 : தாக்கங்கள்” என்ற தலைப்பில் இத்திங்களன்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்புவி எதிர்கொள்ளும் தட்பவெட்பநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத்தட்டுப்பாடு, மனித குலத்தின் நலவாழ்வு பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியும் என்றும், கரியமிலவாயு சுற்றுச்சூழலில் கலந்துவருவதை நாம் வேகமாக கட்டுப்படுத்தினால், மிக மோசமான பாதிப்புகளை தவிர்க்கவும் முடியும் என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் புவி வெப்பமடைதலின் பாதிப்புகள் இருமடங்காகியுள்ளன எனவும், அடுத்த 20-30 ஆண்டுகளில் இயற்கையின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்றும் இந்தப் புதிய ஆய்வறிக்கை கணித்துள்ளது.
இந்த பூமிப்பந்தில் வாழும் எந்தவொரு மனிதரையும் தட்பவெப்பநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடாமல் இருக்கப்போவதில்லை' என்று IPCC என்ற தட்பவெப்பநிலை தொடர்பான அனைத்துலக குழுவின் தலைவர் ராஜேந்திர பச்சோரி கூறினார்.
பெருங்கடல்களில் அமிலத்தன்மையின் அடர்த்தி அதிகரித்துவருவது, பவளப்பாறைகளையும் அவற்றை ஒட்டிவாழும் உயிரினங்களையும் அச்சுறுத்தக்கூடும் என்றும் ஐநா அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.