2014-03-31 16:10:23

திருத்தந்தை : நாம் எந்த பாதையில் உள்ளோம் என்பதைச் சிந்திக்க இத்தவக்காலம் ஒரு சிறந்த நேரம்


மார்ச்,31,2014. கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு பயணம் என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்திருந்தாலும், அவர்கள் தேர்ந்துள்ள வழிமுறைகள் மூன்று விதங்களில் வேறுபடுகின்றன என இத்திங்கள் காலை திருப்பலியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனின் வாக்குறுதிகளை நம்பி வாழ்வின் வாயில் வழியே நடந்துசெல்லும் கிறிஸ்தவர்கள் உள்ள அதே வேளையில், தேங்கிப்போன குட்டைபோல் தங்கள் விசுவாச வாழ்வை வைத்திருப்போரும், வேறுபாதையில் வழிதவறி தொடர்ந்து நடப்போரும் உள்ளனர் என்றார்.
சரியான வழியில் நடப்போர், நடக்காமலேயே முடங்கிப்போனோர், திரும்பிவர விருப்பமில்லாமல் தவறானப்பாதையில் நடப்போர் என மூன்றுவிதமான விசுவாசிகளைப்பற்றி எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் வாக்குறுதிகளை நோக்கி நடைபோட வேண்டிய நாம், நம் பயணத்தை நிறுத்துவதற்கான சோதனைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது என்றார்.
இன்றைய உலகில் தவறான பாதையில் செல்வது பிரச்சனையல்ல, மாறாக அது தவறான பாதை எனத் தெரிந்தவுடன் திரும்பி சரியான பாதைக்கு வராமலிருப்பதே பிரச்னையாகிறது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் பாவ நிலைகள் நம்மை தவறானப் பாதையைத் தேர்ந்தெடுக்க வைக்கின்றன, ஆனால் அதிலிருந்து விலகி நடக்க இறையருள் நமக்கு உதவுகின்றது என்ற திருத்தந்தை, நாம் எந்த பாதையில் உள்ளோம் என்பதைச் சிந்திக்க இத்தவக்காலம் ஒரு சிறந்த நேரம் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.